சென்னை: உலகப் புகழ்பெற்ற "Rich Dad Poor Dad" புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, சுமார் 1.2 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.10,000 கோடி கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பணக்காரனாவது எப்படி என்பதை விளக்கும் புத்தகத்தை எழுதி, அதில் பல கோடி சம்பாதித்த நபரே ரூ.10,000 கோடி கடனில் இருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 79 வயதான முதலீட்டாளர் தொழிலதிபர் ராபர்ட் கியோசாகி. எப்படி முதலீடு செய்ய வேண்டும்.. எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும்.. எப்படி பணக்காரன் ஆகலாம் என்பது தொடர்பான தனது புத்தகங்கள் மற்றும் பேச்சுகள் மூலம் பிரபலமானவர் இவர். குறிப்பாக 1997ஆம் ஆண்டு வெளியான இவரது "Rich Dad Poor Dad" புத்தகம் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது.
இந்த புத்தம் தமிழிலும் கூட ஏழை தந்தை பணக்கார தந்தை என்ற பெயரில் வெளியாகியுள்ளது. முதலீடு, பொருளாதாரம் குறித்த புத்தகங்களில் அதிகபட்ச விற்பனையான புத்தகம் என்ற சாதனையை இது படைத்திருக்கிறது. இதற்கிடையே அவர் பாட்காஸ்ட் மற்றும் நேர்காணல்களில் தனது கடன் தொகை குறித்து விளக்கியுள்ளார். அதில் கியோசாகி, வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடன் பெறுவதுதான் பணக்காரர்கள் பயன்படுத்தும் உத்தி என தெரிவித்துள்ளார். அவர் மேலும், "எனக்கு 1.2 பில்லியன் டாலர் கடன் உள்ளது" என்று கூறியிருந்தார். அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.10,000 கோடியாகும். தனது ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம் இந்த கடனை தான் அடிப்படையாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கியோசாகியின் சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும்போது அதை அடைமானமாக வைத்து மீண்டும் கடன் பெறுவதே கியோசியின் முக்கியமான முதலீட்டு அணுகுமுறையாகும். சொத்தை விற்பதற்கு பதிலாக, அதன் மீது கடன் பெற்று கிடைக்கும் தொகையை வேறு பிஸ்னஸுக்கு பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதாகவும், இதன் மூலம் ஒரு முதலீடு தோல்வியடைந்தாலும் அதன் பாதிப்பு மற்ற முதலீடுகளை பாதிக்காமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் தனது அணுகுமுறையை மற்றவர்கள் அப்படியே பின்பற்றக் கூடாது என்றும் கியோசாகி எச்சரித்துள்ளார். அவர் மேலும், "நான் செய்வதை நீங்கள் செய்யக்கூடாது. 1974ஆம் ஆண்டு முதல் இது தொடர்பாக படித்து வருகிறேன். எனவே, கடனை பெற்று முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு முன்பு அதில் இருக்கும் சாதக பாதகங்களை நாம் கற்று கொள்ள வேண்டும்" என்றார். கியோசாகியின் முன்னாள் மனைவியும் அவரது பிஸ்னஸ் பாட்னருமான கிம் கியோசாகி, இந்த 1.2 பில்லியன் டாலர் கடன் குறித்து வேறு ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.. அதில் அவர், "அவர்கள் 1500 வீடுகளை கொண்ட குடியிருப்பை வைத்திருக்கிறார்கள். அது தொடர்பான முதலீடு இது. இதில் பாட்னர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனவே, அந்த முழு கடனுக்கும் ராபர்ட் கியோசாகி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டிய நிலை இல்லை. அவர் வேண்டுமென்றே தான் 1 பில்லியன் டாலருக்கும் மேல் கடன் இருப்பதாக சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். பணக்காரன் ஆவது எப்படி என புத்தகம் எழுதிய நபருக்கு கடன் இருப்பதாக சொன்னால் மக்கள் கவனம் திரும்பும். அதை வைத்து கடனை பயன்படுத்தி முதலீடு செய்வது ஏன் சிறந்த உத்தியாக இருக்க முடியும் என்பதை அவர் விளக்கியிருப்பார் என நினைக்கிறேன்" என்றார்.ஏழை தந்தை பணக்கார தந்தை
கடன் வலை
கற்க வேண்டும்
என்ன காரணம்