ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்

  • சென்னை: இந்தியப் பங்குச்சந்தையின் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிதி மோசடி புகார் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் ஏற்றுமதித் துறையில் முன்னணி நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (Rajesh Exports Ltd - REL) மீது இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான SEBI (Securities and Exchange Board of India) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

    Advertisement

    சுமார் 2,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 15.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தைப் பொய்யாகக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக SEBI கூறியுள்ளது. இந்த விவகாரம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்கம் மற்றும் வைர ஏற்றுமதியில் புகழ்பெற்றது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், உலக அளவில் பல நாடுகளுடன் வர்த்தகம் செய்து வருகிறது. ஆனால், அதன் நிதி அறிக்கைகளில் உள்ள விசித்திரமான முரண்பாடுகள் தான் இந்த பெரும் சர்ச்சையைத் தூண்டியது. 2025 நிதியாண்டில் நிறுவனம் 4.23 லட்சம் கோடி ரூபாய் வருமானம் (Revenue) ஈட்டியதாகக் காட்டியிருந்தது. ஆனால், அதன் நிகர லாபம் (Profit After Tax) வெறும் 95 கோடி ரூபாய் மட்டுமே!

    லாப வரம்பு (Profit Margin) 0.02 சதவீதம் மட்டுமே என்று கணக்கு காட்டப்பட்டது. இதேபோல் 2024 நிதியாண்டில் 2.8 லட்சம் கோடி ரூபாய் வருமானத்துக்கு 336 கோடி ரூபாய் லாபம் மட்டுமே. இவ்வளவு பிரம்மாண்டமான வருமானத்தில் இவ்வளவு குறைந்த லாபம் சாத்தியமா என்று பங்குச்சந்தை நிபுணர்கள் சந்தேகம் எழுப்பினர்.

    Advertisement

    SEBI இடைக்கால அறிக்கையில், "ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தனது பிசினஸ் மற்றும் நிதி நிலையை பெரிதாகக் காட்டுவதற்காக திட்டமிட்டு வருமானத்தை ஊதிப் பெருக்கிக் காட்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விசாரணை 2024 மார்ச் மாதம் ஒரு முதலீட்டாளரின் புகாரின் அடிப்படையில் தொடங்கியது.

    நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 97 முதல் 99 சதவீதம் வரை வெளிநாட்டுக் கிளை நிறுவனங்கள் மூலம் வருவதாகக் காட்டப்பட்டது. இதில் முக்கியப் பங்கு வகிப்பது சுவிட்சர்லாந்தின் Valcambi என்ற தங்கச் சுத்திகரிப்பு ஆலை. ஆனால், SEBI விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியானது. Valcambi நிறுவனம் வாடிக்கையாளர்களின் தங்கத்தை சுத்திகரித்துக் கொடுக்கும் கூலி வேலை (Job Work) மட்டுமே செய்ததாகவும், அதற்கான கூலித் தொகை கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 3,027 கோடி ரூபாய் மட்டுமே என்றும் தெரியவந்தது. தங்கத்தின் மதிப்பை தங்களது வருமானமாக சேர்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    ஆனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் அந்த தங்கத்தின் மொத்த மதிப்பையும் தனது சொந்த வருமானமாகக் காட்டி, பல லட்சம் கோடிகளாக வருமானத்தை உயர்த்திக் காட்டியுள்ளதாக SEBI கண்டுபிடித்தது. இது திட்டமிட்ட மோசடி என்று கூறப்படுகிறது.

    விசாரணையின்போது நிறுவன உயர் அதிகாரிகள், "வெளிநாட்டு பிசினஸை தலைவர் ராஜேஷ் மேத்தா மட்டுமே கவனித்து வந்தார். எங்களுக்கு விவரங்கள் தெரியாது" என்று கூறினர். ஒட்டுமொத்த பெரும் பிசினஸும் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    மேலும், Affluence Shares and Stocks என்ற புரோக்கரேஜ் நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் விற்றதாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் கணக்கு காட்டியது. ஆனால், அந்த நிறுவனம் "நாங்கள் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுடன் எந்த வர்த்தகமும் செய்யவில்லை" என்று மறுத்தது. ராஜேஷ் மேத்தாவின் தனிப்பட்ட தங்க வர்த்தகங்களை கம்பெனி வர்த்தகமாகக் காட்டியதும், கம்பெனிப் பணம் ரூ.338.90 கோடியை தனிப்பட்ட கணக்குக்கு மாற்றியதும் SEBI குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

    Advertisement

    SEBI, BDO India Services ஐ தணிக்கைக்கு நியமித்தது. ஆனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தனது ERP சிஸ்டத்தை ஆய்வு செய்ய அனுமதி மறுத்தது. சுவிட்சர்லாந்து தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி ஆவணங்களைத் தர மறுத்தது. இதனால் விசாரணை முட்டுக்கட்டை ஏற்பட்டது.

    ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளது. "எங்கள் கணக்குகள் துல்லியமானவை. SEBI அதிகாரிகள் Revenue மற்றும் EBITDA ஐ குழப்பிக் கொண்டதால் இந்த வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. எந்த கம்பெனியும் தேவையின்றி வருமானத்தை அதிகமாகக் காட்டி லாப சதவீதத்தைக் குறைக்காது" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இந்த வழக்கின் இறுதி முடிவு இந்தியப் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை கவனமாக கையாள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் ஏற்கனவே சந்தையில் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன.

    இந்த சம்பவம் இந்திய கார்ப்பரேட் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் கணக்கு தணிக்கையின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. SEBI இந்த வழக்கை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

    English Summary

    SEBI Hits Rajesh Exports with Rs 15 Lakh Crore Fraud Allegation: Massive Stock Market Shock in India