நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!

  • உலகப் பங்குச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பலரும் கவனிக்க தவறியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட முதலீட்டு மாற்றங்கள் வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளை மறுவடிவமைத்து வருகின்றன.

    Advertisement

    இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் அளவில் பணத்தை வெளியேற்றி, கிழக்கு ஆசியா நாடுகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் விளைவு இந்தியாவின் ஆதிக்கம் குட்டி குட்டி நாடுகளிடம் இழந்துள்ளது.

    Advertisement

    தைவான் உலகின் 5வது பெரிய சந்தையாக உயர்வு

    ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, தைவான் பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு 4.95 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதே நேரத்தில் இந்தியாவின் சந்தை மதிப்பு 4.92 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதன் மூலம் தைவான், உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பங்குச் சந்தையாக இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு பிறகு தைவான் இந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஏஐ.

    2026ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து சுமார் 24 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.2 லட்சம் கோடி) அளவுக்கு பணத்தை வெளியேற்றியுள்ளனர். இந்த மோசமான தாக்கம் AI தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    TSMC நிறுவனத்தின் அபார வளர்ச்சி

    தைவானின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் உலகின் முன்னணி செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் மேனுஃபாக்ச்சரிங் கம்பெனி (TSMC) ஆகும். இந்த நிறுவனம் AI சிப் உற்பத்தி துறையில் உலகளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஏஐ துறையின் முதுகெலும்பாக உள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் TSMC பங்குகள் சுமார் 49 சதவீதம் உயர்ந்துள்ளன. இதேவேளையில் தைவான் பங்குச் சந்தையின் முக்கிய குறியீட்டில் இந்த ஒரு நிறுவனம் மட்டும் சுமார் 42 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது. இதனால் TSMC பங்குகளின் உயர்வு அந்நாட்டின் பங்குச்சந்தை மதிப்பை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

    Advertisement

    AI தொழில்நுட்பத்துக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், செமிகண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியில் வலுவான நாடுகள் பெரும் பலனைப் பெற்று வருகின்றன.

    இந்திய சந்தையின் சவால்

    இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை நிஃப்டி 50 குறியீடு இந்த ஆண்டு மட்டும் சுமார் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி கண்ட இந்திய சந்தை, இந்த ஆண்டு முதல் முறையாக இழப்பை நோக்கி செல்லும் நிலைக்கு வந்துள்ளது.

    இதோடு MSCI Emerging Markets குறியீட்டில் இந்தியாவின் எடை கடந்த ஆண்டு 19 சதவீதமாக இருந்தது. தற்போது அது 12 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    Advertisement

    இந்தியா மென்பொருள் மற்றும் சேவைத் துறையில் வலுவாக இருந்தாலும், AI தொடர்பான வன்பொருள் (Hardware) மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியில் நேரடி பங்கு இல்லாதது வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியுள்ளது என சர்வதேச தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சேவை துறையும் தனது ஆதிக்கத்தையும், வர்த்தகத்தையும் இழந்து வருகிறது.

    லிஸ்ட்டில் அடுத்தது தென் கொரியா

    தைவானைத் தொடர்ந்து தென் கொரியா அடுத்த பெரும் சக்தியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல முக்கிய சர்வதேச தரகு நிறுவனங்கள் சியோல் பங்குச் சந்தைக்கான இலக்குகளை உயர்த்தியுள்ளன. இந்தியாவில் இருந்து மேலும் முதலீடுகள் தென் கொரியாவுக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த மாற்றம் சாதாரண சந்தை ஏற்ற இறக்கம் அல்ல. உலக முதலீட்டாளர்கள் தற்போது AI தொழில்நுட்பத்தின் எகோசிஸ்டம் சார்ந்த முதலீட்டு முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்தியா தனது தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வன்பொருள் உற்பத்தித் துறையை வலுப்படுத்தினால் மட்டுமே நீண்டகாலத்தில் வெளிநாட்டு முதலீட்டு ஓட்டத்தை ஈர்க்க முடியும்.

    இந்திய முதலீட்டாளர்கள் AI மற்றும் தொழில்நுட்பத் துறையின் உலகளாவிய போக்குகளை உன்னிப்பாக கவனித்து, தங்கள் முதலீட்டு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய காலம் இது. AI அலை தொடர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாற்றங்கள் இந்தியப் பொருளாதாரத்துக்கு முக்கிய சவால்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும்.

    English Summary

    Taiwan has surpassed India to become the world’s fifth-largest stock market with a market capitalization of $4.95 trillion, driven by the massive AI-driven rally in TSMC shares. Global investors pulled out nearly $24 billion from Indian equities this year, highlighting India’s limited exposure to AI hardware and semiconductor manufacturing compared to East Asian tech powerhouses.