100 குடும்பத்திற்காக பரந்தூர் ஏர்போர்ட் கைவிடல்.. காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தினர் கடும் எதிர்ப்பு

  • சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக் காஞ்சிபுரம் மாநகர வர்த்தகச் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னைக்கு அருகாமையில் இருந்தாலும், காஞ்சிபுரம் இன்னும் பெரிய அளவில் பயன்பெறாமல் உள்ளது. தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைவதன் மூலம் காஞ்சிபுரம் பட்டு மற்றும் கைத்தறித் தொழில் வளர்ச்சியடையும் என்று வர்த்தகச் சங்கத்தினர் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் இத்திட்டத்தைக் கைவிடுவதால், இனி காஞ்சிபுரத்திற்கு வரவிருந்த மிகப்பெரிய தொழில் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    காஞ்சிபுரம் மாநகருக்கு மிக அருகில் தான் பரந்தூர் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியிலிருந்து வெறும் 14 முதல் 16 கி.மீ தூரத்தில் தான் பரந்தூர் உள்ளது. நகரின் எல்லையிலிருந்து பார்த்தால் 10 கி.மீ கூட வராது. அந்த அளவிற்குக் கிட்டவாகவே விமான நிலையம் அமைக்கப்படவிருந்தது. புதிய விமான நிலையம் காஞ்சிபுரத்தில் அமைந்தால், காஞ்சிபுரம் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகள் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே பரந்தூருக்கு விமான நிலையம் வரும்போது, எளிதாக வெளிநாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது.

    Advertisement

    அதேபோல், வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறங்கித் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் செல்ல முடியும் என்கிற சூழலும் இருந்தது. பரந்தூர் விமான நிலையம் என்பது வெறும் சென்னைக்காக மட்டும் வடிவமைக்கப்படவில்லை. அரக்கோணம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் எனச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் தொழில்துறை அசுர வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தான் திட்டமிடப்பட்டது.

    அந்த நகரங்கள் எல்லாமே பரந்தூர் விமான நிலையத்தால் பெரிய வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புள்ள மாவட்டங்களாகவும் நகரங்களாகவும் பார்க்கப்பட்டன. ஆனால், தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதன் மூலம், இந்தப் பகுதிக்கு வர வேண்டிய மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    சென்னை புறநகரைப் பொறுத்தவரை ஏரி, குளம் மற்றும் விவசாய நிலங்களை இழக்காமல் விமான நிலையத்தை அமைக்கவே முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. எனவே, அரசின் இந்த முடிவுக்குக் காஞ்சிபுரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரக்கோணம், ராணிப்பேட்டை பகுதிகளிலும் அரசின் இந்த அறிவிப்பிற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இது குறித்துக் காஞ்சிபுரம் வர்த்தகச் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பரந்தூர் விமான நிலையம் வர வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அந்தத் தீர்மானத்தின்படி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட அமைச்சரிடமும் மனு கொடுக்கவுள்ளோம். இத்திட்டம் வந்தால் பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் பெருமளவில் வளரும். இந்நிகழ்வு பட்டுச் சேலைக்குப் பிரசித்தி பெற்ற இந்த ஊருக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும். இந்த நிலையில்தான் அரசு பரந்தூர் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இந்த உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்து இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். அப்படி இல்லையென்றால், நாங்கள் காஞ்சிபுரம் மக்களுடன் இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    Advertisement

    எனவே, காஞ்சிபுரம் மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் இத்திட்டத்தை எந்தவித அரசியலும் பார்க்காமல் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். ஏகனாபுரம் என்ற கிராமத்தில் வாழும் சில நூறு குடும்பங்களால், தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் அளவிற்கு நிலைமை சென்றுவிடும். ஆகவே, அரசு மீண்டும் ஏகனாபுரம் மக்களோடு பேசி, அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகளைச் செய்து கொடுத்து, இந்தச் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    The Kancheepuram City Merchants' Association strongly opposes the proposal to abandon the Parandur airport project which affects 100 families in Eganapuram