அமெரிக்க அரசின் அறிவிப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.. டிசிஎஸ் விளக்கம்

  • டெல்லி: வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு எடுத்து வருகிறது. இதற்காகவே வெளிநாட்டினருக்கு பணிக்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான நடைமுறைகளை கடுமையாக்கியது. அடுத்ததாக அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்ற வழிவகுக்கும் கிரீன்கார்டு விநியோகத்திலும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருக்கிறது டிரம்ப் தலைமையிலான அரசு. இதற்காக டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், மைக்ரோசாப்ட், எச்.சி.எல். கேப்ஜெமினி, அடோப் ஆகிய 8 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இத்திட்டத்தில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்து அமெரிக்க தொழிலாளர் துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் அறிவிப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று டி.சி.எஸ். அறிவித்துள்ளது.

    Advertisement

    அமெரிக்காவில் ஒரு நிறுவனம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டம் (பி.இ.ஆர்.எம்.) மூலம் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில்தான், வெளிநாட்டு பணியாளர்களுக்கு பின்னர் 'கிரீன்கார்டு' வழங்கப்படுகிறது. இந்த சூழலில் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், மைக்ரோசாப்ட், எச்.சி.எல். கேப்ஜெமினி, அடோப் ஆகிய 8 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இத் திட்டத்தில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்து அமெரிக்க தொழிலாளர் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இந்த அறிவிப்பை அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சர் கெயித் சாண்டர்லிங் இரண்டு நாள் முன்பு வெளியிட்டார். மேற்படி நிறுவனங்களின் புதிய மற்றும் நிலுவையில் இருக்கும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்களை பரிசீலிக்கமாட்டோம் என்றும் கடுமையாக கூறினார். இவர் இப்படிபேசிக்கொண்டிருந்த போதே பேசிய அமெரிக்க துண அதிபர் ஜேடி வான்ஸ், வெளிநாட்டு ஊழியர்களை அடிமைகள் என வர்ணித்தார். அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களையும் கடுமையாக சாடினார்.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய ஐ.டி. நிறுவனங்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அத்துடன் எச்.1பி விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழைந்து, அங்கு நிரந்தர வசிப்பிடத்தைப் பெறுவதற்காகத் தங்கள் நிறுவனத்தின் கிரீன் கார்டுகளை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களை, அமெரிக்காவின் இந்த முடிவு பாதிக்க போகிறது. இனி இந்திய இளம் தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க கனவு அடியோடு கலையும் ஆபத்தும் உள்ளது.

    Advertisement

    இந்த சூழலில் அமெரிக்க கிரீன்கார்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தில் இருந்து டி.சி.எஸ். நிறுவனத்தை அமெரிக்கா நீக்கியது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று டி.சி.எஸ். அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா குழுமத்தைச் சேர்ந்த டி.சி.எஸ். வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் எங்களது பி.இ.ஆர்.எம். சான்றிதழ் விண்ணப்பங்கள் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளன. எனவே, பி.இ.ஆர்.எம். திட்டத்தில் இருந்து டி.சி.எஸ்.ஐ நீக்கி இருப்பது, எங்களது பணியாளர் உத்தியையோ, வாடிக்கையாளர்கள் உறவையோ எவ்விதத்திலும் பாதிக்காது.

    அமெரிக்க தொழிலாளர்துறையின் உத்தரவுக்கு கட்டுப்படுவோம். நாங்கள் வலுவான வளக தேர்வு முறை மூலம் அமெரிக்க உள்ளூர் பணியாளர்களையே பணியமர்த்தி வருகிறோம். அமெரிக்கா முழுவதும் உள்ள 31 அலுவலகங்கள் மற்றும் விநியோக மையங்களில் உள்ளூர் நபர்களையே நியமித்து வருகிறோம். ஏற்கனவே சொன்னதுபோல், அமெரிக்காவில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 15 ஆயிரம் ஊழியர்களை நியமிப்போம். அவர்கள் உள்ளூர் பணியாளர்களாக இருப்பார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    'நாஸ்காம்' அறிக்கை

    அமெரிக்க அரசின் முடிவு குறித்து தொழில் கூட்டமைப்பான 'நாஸ்காம்' தனது அறிக்கையில் கூறுகையில், "அமெரிக்காவின் செயல், ஒரு குறிப்பிட்ட குடியேற்ற நடைமுறையைத்தான் பாதிக்கும். ஆனால், குடியேற்றமும், திறமையான பணியாளர்கள் நகர்வும் வெவ்வேறான விஷயங்கள். இரண்டையும் ஒரே கண்ணாடி வழியாக பார்க்கக்கூடாது. அமெரிக்காவில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தபோது, அதற்கு தீர்வு காண எச்-1பி விசா திட்டம் முக்கிய பங்கு வகித்தது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Topics: #us #tcs

    English Summary

    The US Department of Labor has announced the sudden suspension of eight IT companies—TCS, Infosys, Wipro, Cognizant, Microsoft, HCL, Capgemini, and Adobe—from this program. TCS has stated that the US government's announcement will not have any impact.