தக்காளி விவசாயிகளும், ஐடி ஊழியர்களும் ஒன்னு.. AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

  • சென்னை: ஏஐ துறை உலகையே மாற்றி வருவதை நம் கண்முன்னே காண்கிறோம், எங்கு திரும்பினாலும் பணிநீக்கம், மனித ஊழியர்கள் தேவையில்லாத நிலை அனைத்து துறையிலும் உருவாகி வருகிறது. ஆனால் ஏஐ மூலம் நிறுவனங்கள் செலவுகளை குறைத்து, உற்பத்தி திறனை அதிகரித்தாலும், அனைத்து நிறுவனங்களும் ஒரு சில அமெரிக்க ஏஐ நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான நிலை..

    Advertisement

    இந்தகைய நிலையை தான் ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயிகளுடன் ஒப்பிட்டு பார்க்க துவங்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், அதை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் இந்தியர்கள் கிங்மேக்கராக இருந்தாலும், இந்தியா "வேல்யூ சேன்" (Value Chain) என்ற விஷயத்தை இழந்து வருகிறது.

    Advertisement

    தக்காளி விவசாயி

    ஒரு சாதாரண தக்காளி விவசாயி இரவு பகலாக தன் பயிருக்கு செலவழிக்கும் உழைப்பு, நீர், உரம் மற்றும் நேரத்துக்குப் பிறகு கிடைக்கும் லாபம் வெறும் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே. ஆனால், அதே தக்காளியை வாங்கி அதிலிருந்து கெட்சப், ஜாம் தயாரித்து, பிராண்ட் பெயருடன் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வாங்கிய தக்காளி விடவும் மூன்று மடங்கு லாபம் அதிகமாகப் பெறுகின்றன.

    இந்த 3 மடங்கு லாப வித்தியாசத்திற்கு முக்கிய காரணம், வெறும் மூலப்பொருளை (commodity) விற்பதற்கும், அதை மதிப்பு கூட்டி (value addition) பிராண்டாக்கி விற்பதற்கும் உள்ள இடைவெளியாகும்.

    Advertisement

    வேல்யூ செயின் - லாபத்தில் வித்தியாசம்

    இன்றைய உலகில் வெறும் பொருளை உற்பத்தி செய்பவர்கள் பெரிய அளவில் லாபம் பார்ப்பது மிகவும் கடினம். பிராண்ட், விநியோகம், மார்கெட்டிங், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துபவர்களே பெரும்பாலான லாபத்தை அனுபவிக்கின்றனர். இந்த "வேல்யூ செயின்" கட்டுப்பாட்டைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.

    இந்திய AI துறை

    இதே போன்ற நிலைமை இப்போது இந்தியாவின் AI துறையிலும் உருவாகி வருகிறது. இந்தியா AI தொழில்நுட்பத்தால் நிச்சயம் பயனடையும். ஆனால், AI துறையில் உருவாகும் பெரும்பாலான மதிப்பு (value) அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    Advertisement

    இந்தியாவில் நடைபெறும் AI தொடர்பான முதலீடுகளில் 70 முதல் 80 சதவீதம் அமெரிக்க நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் ஏன் இவ்வளவு முதலீடு செய்கிறார்கள்? ஏனெனில், AI-யின் மதிப்பு சங்கிலியை (value chain) தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

    அமெரிக்க நிறுவனங்களின் நோக்கம்

    சரி, இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்து டேட்டா சென்டர் முதல் ஏஐ சேவையை இலவசமாக அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் கொண்டு வருவது ஏன்.

    இந்தியாவில் டெக் வல்லுநர்கள் அதிகம் என்பதால் இலவசமாக கொடுக்கும் போது மக்கள் அனைத்து பிரிவிலும், அனைத்து சேவைகளைலும் ஏஐ பயன்படுத்துவது அதிகரிக்கும். குறிப்பாக பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஏஐ அடிப்படையிலான சேவையை அளிப்பதிலும் இந்திய ஐடி நிறுவனங்கள் முன்னோடியாக உள்ளது. இதன் காரணமாகவே அந்திரோபிக் மற்றும் ஓப்பன்ஏஐ இந்தியாவில் தனது அலுவலகத்தை திறந்துள்ளது.

    Advertisement

    இந்திய விவசாயிகள் தக்காளி வளர்த்து மூலப்பொருளாக விற்பது போல, இந்திய இளைஞர்கள் தரவுகளை உருவாக்கி, AI மாடல்களை குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் பயிற்றுவித்து கொடுக்கும் நிலையில் தான் தற்போது இந்தியாவில் உருவாகியுள்ளது.

    அமெரிக்க நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை பிராண்டாக்கி, உலக அளவில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டும் வாய்ப்பு அமெரிக்க நிறுவனங்களிடம் சென்று கொண்டிருக்கிறது.

    சீனாவின் தேக்க நிலை

    இந்தியாவில் இலவச ஏஐ திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு சீன ஏஐ நிறுவனங்களின் தடாலடியான வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதிரடி அறிவிப்புகள் காணாமல் போய்யுள்ளது. இதற்கு காரணம் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச திட்டம் மூலம் அமெரிக்க ஏஐ மாடல் மிகப்பெரிய அளவில் டிரைனாகியுள்ளது.

    Advertisement

    எனவே, இந்திய AI துறையும், ஐடி - டெக் ஊழியர்கள் வெறும் மூலப்பொருள் வழங்குநராக மட்டுமே உள்ளனர். இது தொடர்ந்தால் தக்காளி விவசாயிகள் போல் 5 -10 சதவீத லாபத்தை மட்டுமே பார்க்க முடியும். இதற்கு தீர்வு என்ன?

    இதுதான் தீர்வு

    இந்தியாவில் சொந்த ஏஐ மாடல், சொந்த பிராண்டுகள், சொந்த தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் விநியோக வலையமைப்புகளை உருவாக்க வேண்டும். சர்வம் ஏஐ போன்ற பல நிறுவனங்கள் இருந்தாலும் மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்துவது கிடையாது, ஏஐ மாடல் பொருத்தவரையில் டிரைனிங் தான் முக்கியம். 5 வருடத்திற்கு முன் சாட்ஜிபிடி-யின் பதில்கள் எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என அனைவருக்கும் தெரியும், ஆனால் இப்போது.

    இதை செய்யவில்லை எனில், தக்காளி விவசாயிகளின் கதி AI துறையிலும் இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

    தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் தொழில்நுட்பம், தரவு மையங்கள், AI திறன் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்து, உள்ளூர் நிறுவனங்களை வளர்க்க வேண்டிய காலம் இது. வெறும் மூலப்பொருள் உற்பத்தியாளராக இருந்தால் லாபம் குறைவு. முழு மதிப்புச் சங்கிலியையும் கட்டுப்படுத்தினால்தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி சாத்தியம். இதுதான் இந்தியாவின் ஏஐ எதிர்காலமாக இருக்கும்.

    Topics: #ai #it #farmers

    English Summary

    Indian tomato farmers earn just 5-10% profit while ketchup companies make 3X more by controlling the value chain. The same risk now faces India’s AI sector, where 70-80% of investments come from American firms, turning Indian talent and data into raw material for foreign AI giants. தக்காளி விவசாயிகள் 5-10% லாபம் மட்டுமே பார்க்கும் நிலையில், கெட்சப் நிறுவனங்கள் 3 மடங்கு அதிக லாபம் ஈட்டுகின்றன. இதே value chain பிரச்சினை இப்போது இந்திய AI துறையிலும் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் 70-80% முதலீடு செய்து இந்திய தரவு மற்றும் திறமையை மட்டும் பயன்படுத்தி பெரும் லாபம் அடையும் அபாயம் எழுந்துள்ளது.