ஏடிஎம் கார்டுகளுக்கு எண்டு கார்டு.. சத்தமில்லாமல் நடக்கும் பெரிய மாற்றம்.. ஆர்பிஐ அதிர்ச்சி தகவல்!

  • சென்னை: பர்சில் பணம் இருக்கிறதா, ஏடிஎம் (Debit Card) கார்டு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியில் கிளம்பிய காலமெல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது. பீரோவில் இருக்கும் கார்டுகளில் இப்போது லேசாக தூசி படியத் தொடங்கியிருக்கும். இன்று வெளியில் கிளம்பும்போது நமக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் இருந்தால் போதும் - அது நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்!

    Advertisement

    நீங்களாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி, இன்று எல்லாரும் கார்டுகளை வீட்டில் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது ஏதோ சும்மா பேச்சுக்குச் சொல்லும் விஷயம் அல்ல; இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை இதையே தான் புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கிறது. இந்தியாவில் ஏடிஎம் கார்டுகளின் பயன்பாடு சத்தமில்லாமல், மிக வேகமாக சரிந்து வருகிறது.

    Advertisement

    ஏடிஎம் கார்டுகளுக்கு என்னாச்சு?

    ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ஏடிஎம் கார்டு மூலமாக மக்கள் செய்த பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 408.7 கோடியாக இருந்த கார்டு பரிவர்த்தனைகள், 2025ஆம் ஆண்டில் வெறும் 133.6 கோடியாகக் குறைந்துவிட்டது.

    பணத்தின் மதிப்பை வைத்துப் பார்த்தால், கார்டுகள் மூலம் மக்கள் செலவழித்த தொகை ₹7.4 லட்சம் கோடியிலிருந்து ₹4.5 லட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. அதாவது, கார்டுகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 24 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டதாக ஆர்பிஐ கூறுகிறது.

    Advertisement

    ராஜா போல வந்த யுபிஐ (UPI)!

    கார்டுகள் குறைந்ததற்குப் பின்னால் இருக்கும் ஒரே சூப்பர் ஹீரோ 'யுபிஐ' தான். கடந்த பத்து ஆண்டுகளில் (2016-2025) இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு, அதாவது சுமார் 33 மடங்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் தான் மக்களின் பாக்கெட்டுகளை ஆக்கிரமித்துள்ளன. 2025ஆம் ஆண்டின் கணக்குப்படி, இந்தியாவில் நடக்கும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85.5 சதவீதத்தை யுபிஐ மட்டுமே பிடித்து முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது.

    Advertisement

    இன்று நாம் எதற்கும் 'பணம் கொடுக்கிறோம்' என்று சொல்வதில்லை, 'ஸ்கேன் செய்கிறோம்' என்றுதான் சொல்கிறோம். காய்கறிக்கடை, டீக்கடை முதல் பெரிய கடைகள் வரை எல்லா இடங்களிலும் இந்த யுபிஐ கியூஆர் (QR) கோடுகள் வந்துவிட்டன. 2025 ஜூன் மாதத்தில் 6,782 லட்சமாக இருந்த கியூஆர் கோடுகளின் எண்ணிக்கை, அதே ஆண்டு டிசம்பருக்குள், அதாவது வெறும் ஆறே மாதங்களில் 7,313 லட்சமாக உயர்ந்துள்ளது.

    பாதுகாப்புக்கு எது நல்லது?

    ஏடிஎம் கார்டுகளை வீட்டில் வைப்பது வெறும் சௌகரியத்திற்காக மட்டுமல்ல, அது நம்முடைய பணப் பாதுகாப்புக்கும் மிக நல்லது என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஆன்லைன் ஷாப்பிங் போன்ற விஷயங்களுக்கு ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்துவது கொஞ்சம் ஆபத்தானது.

    Advertisement

    ஏனென்றால், யுபிஐ மூலம் ஒரு பரிவர்த்தனை செய்யும்போது ஏதேனும் தவறு நடந்தால், அந்த ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை மட்டுமே பாதிக்கப்படும். ஆனால், உங்களுடைய ஏடிஎம் கார்டு விபரங்கள் ஆன்லைனில் திருடப்பட்டால், திருடர்கள் உங்கள் முதன்மை வங்கிக் கணக்கில் (Primary Bank Account) இருக்கும் மொத்தப் பணத்தையும் சுருட்டிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே, கார்டுகளைத் தவிர்ப்பது ஒரு நல்ல பாதுகாப்பு உத்தியாகும்.

    நாம் பணத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

    ஆர்பிஐ அறிக்கைப்படி, இந்திய மக்கள் தங்களின் பணத் தேவைகளை அழகாகப் பிரித்துக் கையாள்வது தெளிவாகத் தெரிகிறது:

    சிறு தேவைகளுக்கு யுபிஐ: நாட்டின் மொத்தப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் யுபிஐ 85.5% பங்கைக் கொண்டிருந்தாலும், பணத்தின் மதிப்பில் அது வெறும் 9.5% தான். அதாவது, அன்றாடச் சின்னச் சின்னச் செலவுகளுக்கு மட்டுமே மக்கள் யுபிஐ-ஐப் பயன்படுத்துகிறார்கள்.

    Advertisement

    பெரிய தேவைகளுக்கு ஆர்டிஜிஎஸ் (RTGS): பெரிய நிறுவனங்கள் செய்யும் பல கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் வெறும் 0.1% மட்டுமே நடக்கிறது. ஆனால், நாட்டின் மொத்தப் பண மதிப்பில் அது 68.6% இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

    ஷாப்பிங்கிற்கு கிரெடிட் கார்டு: ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கும், அவசரக் கடனுக்கும் மக்கள் கிரெடிட் கார்டுகளை (Credit Cards) அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

    சுருக்கமாகச் சொன்னால், ஒரு காலத்தில் நம் பணத்தேவையின் ராஜாவாக இருந்த ஏடிஎம் கார்டுகள், இன்று வெறும் ஏடிஎம் மிஷினில் இருந்து அவசரத்திற்குப் பணம் எடுப்பதற்கும், யுபிஐ வேலை செய்யாதபோது பேக்-அப் ஆகப் பயன்படுத்துவதற்கும் மட்டுமே சுருங்கிப் போய்விட்டது!

    English Summary

    Why Millions of Indians Are Leaving Credit, Debit cards Behind, According to RBI?