தங்க முட்டையிடும் தனியார் பள்ளிகள்.. சர்வதேச நிறுவனங்களின் திடீர் காதல்.. இதுதான் பிஸ்னஸ் ரகசியம்

  • சென்னை: பொதுவாக தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அதிக லாபம் தரும் விஷயங்களில் தான் முதலீடு செய்வார்கள். அப்படி பார்த்தால் அவர்கள் ஏஐ, ஐடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தான் முதலீடு செய்வார்கள் என நாம் நினைப்போம். ஆனால், இந்தியாவில் அவர்கள் பள்ளிகளில் முதலீடு செய்து வருகிறார்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்.. பள்ளிகளை வைத்து மாறும் சர்வதேச பிஸ்னஸ் குறித்து நாம் பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவில் சமீபத்தில் நடந்த இரண்டு மிக பெரிய முதலீட்டு ஒப்பந்தங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த முதலீடுகள் மிக பெரிய நிறுவனங்கள் அல்லது ஸ்டார்ட்அப்களில் நடக்கவில்லை.. மாறாக வகுப்பறைகளுக்குள் நடைபெற்றுள்ளன.

    Advertisement

    தனியார் முதலீடு

    நமது நாட்டில் புகழ்பெற்ற Orchids சர்வதேச பள்ளிகள் மற்றும் ஸ்பார்கிள்பாக்ஸ் (SparkleBox) ஆகியவற்றை நடத்தும் கே12 டெக்னோ குழுமத்தில் பீக் XV என்ற நிறுவனத்தின் பங்குகள் இருந்தன. அதை விட்ருவியன் பார்ட்னர்ஸ் (Vitruvian Partners) என்ற முதலீட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சர்வதேச பள்ளிகளில் சர்வதேச முதலீடு நிறுவனமான விட்ருவியன் பார்ட்னர்ஸ் பெரிய முதலீடு செய்துள்ளது. இந்த டீல்படி பார்த்தால் சர்வதேச பள்ளியை நடத்தும் கே12 டெக்னோ நிறுவனத்தின் மதிப்பு சுமார் ₹7,200 கோடியாகும்.

    Advertisement

    அதேபோல லைட்ஹவுஸ் என்ற நிறுவனம் பாத்வேஸ் குருகிராம் (Pathways Gurgaon) என்ற பள்ளியை சுமார் ₹1,500 கோடி மதிப்பில் கையகப்படுத்தியது. அதாவது பள்ளிகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடியாக இருக்கிறது. இது நமது நாட்டில் இயங்கும் பல நிறுவனங்களின் மதிப்பை காட்டிலும் அதிகமாகும்.

    காரணங்கள்

    முதலில் இதை பார்க்கும்போது, அடடே இந்திய கல்வித்துறையின் எதிர்காலத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனரே என நாம் நினைக்கலாம். ஆனால், அவர்களை உண்மையில் அவர்களை ஈர்ப்பது கல்வி அல்ல.. மாறாக அந்தத் துறை உருவாக்கும் நிலையான வருமானம்தான். எப்போதுமே தனியார் முதலீட்டு நிறுவனங்களின் நோக்கம் சமூக சேவை அல்ல. தொடர்ந்து வளரக்கூடிய, கணிக்கக்கூடிய வருமானம் தரும் நிறுவனங்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் டார்கெட். அதில் தவறு எதுவும் இல்லை.. அது அவர்களின் பிஸ்னஸ்.

    Advertisement

    அதன்படியே இப்போது அவர்கள் பார்வை தனியார் பிரீமியம் பள்ளிகள் மீது திரும்பியுள்ளது. அதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், இந்தியா போன்ற நாட்டில் கல்விக்கான தேவை எளிதில் குறையாது. பள்ளிக் கட்டணம் எவ்வளவு உயர்ந்தாலும், தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் அந்தச் செலவை ஏற்று கொள்கிறார்கள். மேலும், இந்தியாவில் குடும்பங்களின் வருமானம் சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் உயர்ந்துள்ளன. இதனால் சர்வதேச தரம் கொண்ட பள்ளிகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது.

    Advertisement

    இந்தியாவின் வளர்ச்சி

    இதில் மற்றொரு முக்கிய காரணமும் இருக்கவே செய்கிறது. அதாவது கொரோனாவுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் இரண்டு வகையாக பிரிந்துவிட்டது. ஒரு பக்கம் உயர்ந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் முதலீடு என அவர்கள் செல்வம் அதிகரித்து கொண்டே போகிறது.. அதே நேரத்தில், பல நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்கள் பணவீக்கம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டன.

    அதாவது சிவாஜி படத்தில் ரஜினி சொல்வதை போல ஏழைகள் ஏழைகளாகிக் கொண்டே போகிறார்கள். பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்க்கிறார்கள். பொருளாதார நிபுணர்கள் இதை "K-shaped Recovery" என்று குறிப்பிடுகின்றனர். இதில் அதிக வருமானத்தை கொண்டுள்ள குடும்பங்கள் மூலமாகவே பிரீமியம் பள்ளிகள் பெரும் பலன் அடைந்தன.

    Advertisement

    அரசு பள்ளிகள்

    கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம் அரசு பள்ளிகளின் தரம் மோசமடைந்துவிட்டது என்றும் கூறிவிட முடியாது. உண்மையில் கற்றல் திறன்கள் மற்றும் மாணவர் தக்கவைப்பு போன்றவற்றை வைத்து பார்த்தால் அரசு பள்ளிகளிலும் கல்வியின் தரம் மேம்பட்டே வருகிறது.. இருப்பினும், வசதி கிடைத்தவுடன் பல குடும்பங்கள் தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்கின்றன. அதுவும் ப்ரீமியம் பள்ளிகள் மீதே அவர்கள் பார்வை திரும்புகிறது.

    இதுவே முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பெற்றோர்கள் தனது குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டால், உடனடியாக பள்ளியை மாற்ற மாட்டார்கள். அந்த பள்ளி பிடித்துவிட்டால் +2 வரை அங்கேயே படிக்க வைப்பார்கள். இதனால் ஒரு மாணவர் சேர்க்கை என்பது அவர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை நிலையான வருமானத்தை உருவாக்கும்.

    வருமானம்

    பள்ளிகளுக்கு பல்வேறு வகையில் வருமானம் கிடைக்கும். சேர்க்கை கட்டணம், போக்குவரத்து கட்டணம், உணவு, சீருடை, புத்தகங்கள், சம்மர் கேம்ப் என தனித்தனியாக என பல வழிகளில் வருமானம் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இதுவே முதலீட்டாளர்களைப் பெரியளவில் கவர்கிறது.

    பிரீமியம் பள்ளிகளுக்கு இன்னொரு பெரிய பலம் உள்ளது. அது நம்பிக்கை. ஒரு நல்ல பள்ளி பிராண்டை உருவாக்க பல ஆண்டுகள் தேவை. தரமான ஆசிரியர்கள், பெற்றோரின் நம்பிக்கை, அரசு அனுமதிகள் என பல தடைகளை கடக்க வேண்டும். இதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என யாராலும் இதில் நுழைய முடியாது. எனவே, ஏற்கனவே நல்ல பெயர் பெற்று இருக்கும் பிரீமியம் பள்ளிகளுக்கு இதில் ஒரு பெரிய அட்வான்டேஜ் இருக்கிறது. இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் பார்வை அவர்கள் மீது திரும்பியுள்ளது.

    மாறிய டிரெண்ட்

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதலீட்டாளர்கள் அதிக வளர்ச்சி தரும் டிஜிட்டல் ஸ்டார்ட்அப்களைத் தேடினர். ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது. உடனடியாகவும் நிலையாகவும் வருமானம் தரும் நிறுவனங்களே முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் மருத்துவமனைகள் மற்றும் டயக்னோஸ்டிக் நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்த நிலையில், இப்போது பிரீமியம் பள்ளிகள் மீது அவர்கள் கவனம் திரும்பியுள்ளது.

    அதேநேரம் இந்தியாவில் பள்ளிகளை நடத்துவதிலும் சவால்கள் இருக்கின்றன. கட்டண கட்டுப்பாடுகள், அரசியல் அழுத்தங்கள், புதிய வளாகங்களை அமைக்க தேவைப்படும் அதிக முதலீடு போன்றவை தொடர்ந்து இருக்கின்றன. இருந்தாலும், நிலையான மற்றும் தொடர்ந்து கிடைக்கும் வருமானம் காரணமாக உலக முதலீட்டாளர்கள் இந்தத் துறையை மிகவும் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கின்றனர்.

    பாவம் மிடில் கிளாஸ்

    இது இப்போது ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது. ஒருபுறம் அரசு பள்ளிகள் அனைவருக்கும் கல்வியை வழங்க முயல்கிறது. மறுபுறம், ப்ரீமியம் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகள் குவிகின்றன. ஆனால், இரண்டிற்கும் நடுவில் மாட்டிக் கொண்டு இருக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கு தேவையான பள்ளிகளின் எதிர்காலம் இதில் என்னவாகும் என்பது மிக பெரிய கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Private equity giants are increasingly investing in India school sector(இந்திய பள்ளிகளில் குவியும் மிக பெரிய முதலீடுகள்): Indian Schools are getting bigger and bigger investments.