பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது?

  • சென்னை: உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியைப் பெருக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், 22% முதல் 30% வரை எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கான கலால் வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கியிருக்கிறது. சாமானிய மக்கள் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், மத்திய அரசின் முடிவினால் எதிர்காலத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.ஏன் பெட்ரோல் விலை எதிர்காலத்தில் குறையும்.. என்னென்ன சாதக பாதங்கள் என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.

    Advertisement

    ஈரான் பிரச்சனையால் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் போகுமோ என்று அச்சப்படாத மக்களே இல்லை.. அந்த அளவிற்கு கடந்த 3 மாதங்களாக நிலைமை கடினமாகவே இருந்தது. அரசு திறம்பட சமாளித்து பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. ஆனால் சிலிண்டர் விவகாரத்தில் அடியோடு சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் போதிய அளவில் கேஸ் இருப்பு நிலையம் இந்தியாவில் இல்லை.. இதனால் வரவர விநியோகித்து வந்த அரசுக்கு, பிரச்சனை தொடங்கிய நான்கு நாட்களிலேயே நிலைமை மோசமானது.. அந்த பிரச்சனை ஓரளவு சமாளிக்கிறது என்றாலும் இன்று வரை பழைய இயல்பு நிலை திரும்பவில்லை..

    Advertisement

    சரி விஷயத்திற்கு வருவோம். பெட்ரோல் டீசல் விலை அண்மையில் அதிரடியாக உயர்த்தப்பட்டன. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை 110 ரூபாய் என்கிற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர், மாதத்திற்குச் சராசரியாக 50 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தினால், அவரது மாதாந்திர எரிபொருள் செலவு மட்டுமே எளிதாக 5,500 ரூபாயைக் கடந்துவிடுகிறது. இதுவே ஒரு வருட கணக்கில் பார்த்தால் 70,000 ரூபாய்க்கும் மேல் செல வைக்கிறது. இதனால்தான் பெட்ரோல் விலை தொடர்பாக வெளியாகும் எந்தவொரு அறிவிப்பும் சாதாரண மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    Advertisement

    எவ்வளவு இறக்குமதி? அரசுக்கு என்ன சிக்கல்?

    நம் நாட்டை பொறுத்தவரை பயன்படுத்தும் கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதனால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென மாறினாலோ அல்லது தற்போது நிலவும் அமெரிக்கா-ஈரான் போர் போன்ற சர்வதேச அரசியல் நெருக்கடிகள் மற்றும் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டாலோ, அது உடனடியாக இந்தியாவை கடுமையாக பாதிக்கிறது. இந்த இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும்,நாட்டின் எரிபொருள் தேவையைப் பாதுகாக்கவும் மாற்று வழிகளை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஸ்டோக் வந்தது போல் எதிர்காலத்தில் ஏதேனும் பெரிய பிரச்சனை வந்தால், அரசால் சமாளிக்க முடியாமல் போகக்கூடாது என்று மத்தியஅரசு விரும்புகிறது.

    Advertisement

    எத்தனால் கலப்பு மற்றும் கலால் வரி நீக்கம்

    எனவே தான் இந்த இறக்குமதிச் சிக்கலுக்குத் தீர்வாக, பெட்ரோலில் எத்தனாலைக் கலந்து விற்கும் திட்டத்தை அரசு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு வெறும் 1.5 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது திட்டமிட்ட இலக்கிற்கு முன்பாகவே நாட்டின் பல பகுதிகளில் 20 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது.

    இதன் அடுத்த கட்டமாக, 22%, 25%, 27% மற்றும் 30% (E22, E25, E27, E30) வரை அதிகளவில் எத்தனால் கலந்த பெட்ரோல் எரிபொருட்களுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிகளைச் சமீபத்தில் அரசு அறிவித்திருககிறது. குறிப்பிட்ட சில சந்தைகளில் 'E85' ரக பெட்ரோலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த அதிக எத்தனால் கலந்த பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி செய்து விற்க ஊக்குவிப்பதற்காகவே, தற்போது அவற்றுக்கான கலால் வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கியிருக்கிறது

    Advertisement

    எத்தனால் ஏன் மலிவாகக் கிடைக்கிறது? அதன் உற்பத்தி எவ்வளவு?

    சர்வதேச சந்தை மற்றும் போர்களால் விலை மாறும் கச்சா எண்ணெயைப் போலல்லாமல், எத்தனால் என்பது உள்நாட்டிலேயே நமது விவசாயப் பொருட்கள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் மூலம் தயாரிக்கப்படுவதாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் எத்தனால் துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது.

    அரசு கணக்கீட்டின்படி, இந்தியாவின் எத்தனால் உற்பத்தித் திறன் தற்போது ஆண்டுக்கு 1,700 கோடி லிட்டருக்கும் அதிகமாக உள்ளது. நாட்டில் 20 சதவீத எத்தனால் கலப்புத் திட்டத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல ஆண்டுக்குச் சுமார் 1,016 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படுகிறது. தொழிற்சாலைப் பயன்பாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த எத்தனால் தேவை ஆண்டுக்கு 1,350 கோடி லிட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொழிற்துறை வளர்ச்சி, சர்க்கரை ஆலைகளுக்கும் இந்திய விவசாயிகளுக்கும் ஒரு புதிய வருமான வழியை உருவாக்கி வருகிறது.

    Advertisement

    உள்நாட்டிலேயே தயாராவதால் இதன் தயாரிப்புச் செலவு கச்சா எண்ணெய் பெட்ரோலை விடக் குறைவு. இதற்குச் சான்றாக, சமீபத்தில் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட E85 ரக எரிபொருள் ஒரு லிட்டர் சுமார் 82 ரூபாய்க்கு விற்பனை சய்யப்படுகிறது. ஆனால், அங்கு சாதாரண பெட்ரோலின் விலை லிட்டருக்கு 102 ரூபாயாக உள்ளது. இரண்டிற்கும் இடையே லிட்டருக்கு 20 ரூபாய் வரை வித்தியாசம் இருக்கிறது.

    சாமானியர்களுக்கான நன்மைகளும் தீமைகளும்:

    நன்மைகள் என்ன..

    எதிர்காலத்தில் எரிபொருள் செலவு குறையும்: உள்நாட்டு எத்தனால் உற்பத்தி அதிகரித்து, இந்த புதிய ரக எரிபொருட்கள் சந்தைக்கு வரும்போது, E85 எரிபொருளில் பார்ப்பது போன்ற விலை வீழ்ச்சி சாதாரண பெட்ரோலிலும் ஏற்பட்டு மக்களின் எரிபொருள் செலவு கண்டிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு குறையும். கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவதால், ஒரு லிட்டர் பெட்ரோலில் ஐந்தில் ஒரு பங்கு பணம் வெளிநாடுகளுக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டு உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குள் இருக்கும்.

    தீமைகள் என்ன

    இந்த வாரிவிலக்கு சலுகை எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் மட்டுமே தரப்பட்டுள்ளது. எனவே, இன்று பங்குகளில் விற்கப்படும் பெட்ரோல் விலை உடனடியாகக் குறைந்துவிடாது. அடுத்ததாக இ85 பெடரோலுக்கு ஏற்ப வாகனத்தை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். தற்போது இந்தியச் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான வாகனங்கள் இந்த அதிக எத்தனால் கலந்த புதுவகை எரிபொருட்களில் இயங்கும் திறன் கொண்டவை கிடையாது. நாட்டின் வாகன தயாரிப்பே அடியோடு மாற வேண்டும். அதேபோல்'ஃபிளெக்ஸ்-ஃப்யூல்' எனப்படும் மாற்று எரிபொருள் வாகனப் பயன்பாடும் அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரிக்க வேண்டும்.

    எப்படி பார்த்தாலும், இப்போது உள்ள வாகனங்களுக்கு இ85 பெட்ரோலை உடனே மாற்ற முடியாது. இப்போது இந்தியச் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் சாதாரண வாகனங்களில் இந்த 'E85' பெட்ரோலை உடனே ஊற்றிப் பயன்படுத்த முடியாது. அப்படிச் செய்தால் அது வாகனத்தின் இன்ஜினைக் கடுமையாகப் பாதித்துவிடும். சாதாரண பெட்ரோல் இன்ஜின்கள் 100% பெட்ரோல் அல்லது குறைந்த அளவு எத்தனால் (தற்போது புழக்கத்தில் இருக்கும் E10 அல்லது E20 வரை) கலந்த எரிபொருளை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், E85 என்பது 85% எத்தனாலாலும், வெறும் 15% மட்டுமே பெட்ரோலாலும் ஆன ஒரு எரிபொருள் ஆகும். இவ்வளவு அதிக வீரியம் கொண்ட எத்தனாலைச் சாதாரண இன்ஜின்களால் எரிக்க முடியாது.

    அதேபோல் எத்தனால் இயற்கையிலேயே உலோகங்களையும், ரப்பர் பாகங்களையும் அரிக்கும் குணம் கொண்டது. சாதாரண வாகனங்களில் உள்ள எரிபொருள் குழாய்கள் , சீல்கள் (Seals) மற்றும் கேஸ்கெட்டுகள் (G யாவும் சாதாரண பெட்ரோலுக்கு ஏற்றபடி ரப்பரால் செய்யப்பட்டிருக்கும். இதில் E85 பெட்ரோலை ஊற்றினால், அந்த ரப்பர் பாகங்கள் மிக விரைவிலேயே உப்பி, அரித்துப்போய் எரிபொருள் கசிவு அல்லது இன்ஜின் பழுது ஏற்பட வழிவகுத்துவிடும்.

    எனவே E85 போன்ற அதிக எத்தனால் கொண்ட எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு என்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஃபிளெக்ஸ்-ஃப்யூல் வாகனங்கள் (FFV) தேவை. இந்த வாகனங்களில் உள்ள இன்ஜின், கம்ப்யூட்டர் சென்சார்கள் (ECU) மற்றும் எரிபொருள் செலுத்தும் அமைப்புகள் அனைத்தும் பெட்ரோலின் அளவிற்கு ஏற்ப எத்தனால் கலப்பு மாறினாலும், அதற்குத் தகுந்தாற்போல் இன்ஜினைச் சீராக இயக்கக்கூடிய திறன் கொண்டவையாக இருக்கும்.

    தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து E85 போன்ற எரிபொருட்களை மலிவாகக் கொண்டு வந்தாலும், சாமானிய மக்கள் அதன் முழுப் பலனையும் உடனடியாகப் பெற முடியாது. எதிர்காலத்தில் மக்கள் தங்களின் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு, புதிய ஃபிளெக்ஸ்-ஃப்யூல் வாகனங்களை வாங்கத் தொடங்கும்போது மட்டுமே இந்த விலைக்குறைப்பின் உண்மையான லாபம் மக்களுக்கு கிடைக்கும். அதுவரை எட்டாத கனவு தான்.

    English Summary

    Will the price of petrol drop below 100? What is going to happen in India following the Central Government's Ethanol Fuel tax cut?