புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம்.. ஆர்பிஐ - மத்திய அரசு முடிவு? அப்போ ரூ.500 நோட்டின் நிலைமை என்ன?

  • இந்தியப் பணச் சந்தையில் தற்போதைய காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' (Polymer) எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

    Advertisement

    இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த முக்கியத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், ரொக்கப் பணப் புழக்கம் அதிமாகவே உள்ளது, இதனால் புதிய காகித நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த மாற்றுத் திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தால் தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்குமா அல்லது அவற்றை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்துமா என்ற ஒரு மிகப்பெரிய பயமும், கேள்வியும் சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இது குறித்துத் தெளிவுபடுத்திய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, "பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான இந்தத் திட்டம் தற்போது மிகவும் ஆரம்பக் கட்டத்தில் (Preliminary Stage) மட்டுமே உள்ளது. இதன் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து ரிசர்வ் வங்கி விரிவாக ஆய்வு செய்து வருகிறது. இதில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

    Advertisement

    எனவே, பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை" என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், தற்போதைக்குக் காகித நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது.

    10 ஆண்டுகளுக்குப் பின் தூசு தட்டப்படும் திட்டம்

    ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டு வரத் துடிப்பதற்குக் பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதாரக் காரணி ஒளிந்துள்ளது. காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், மக்கள் பயன்பாட்டிற்குப் பிறகு அவை மிக விரைவாகக் கிழிந்து, அழுக்காகி விடுகின்றன. இவ்வாறு சேதமடைந்த பழைய நோட்டுகளைச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்று, அவற்றை அழிப்பதற்கே ரிசர்வ் வங்கிக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

    Advertisement

    இதற்கு மாற்றாகப் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்தும்போது, அவை தண்ணீரில் நனைந்தாலும் கிழியாது, அழுக்கு ஆகாது மற்றும் காகித நோட்டுகளை விட 4 மடங்கு அதிக ஆயுள் கொண்டவையாக இருக்கும். இதனால், நீண்ட கால நோக்கில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு கணிசமாகக் குறையும்.

    2014 இல் நடந்த சோதனை ஓட்டம்

    இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் முயற்சி இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாகக் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், நாட்டின் வெவ்வேறு காலநிலை மற்றும் புவியியல் அமைப்புகளைக் கொண்ட கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய 5 நகரங்களில், முதற்கட்டமாக 10 ரூபாய் மதிப்புள்ள 100 கோடி பிளாஸ்டிக் நோட்டுகளைச் சோதனை முறையில் (Field Trial) புழக்கத்தில் விட அப்போதைய மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்றது.

    Advertisement

    ஆனால், அந்தச் சமயத்தில் பிளாஸ்டிக் நோட்டுகளின் தடிமன் காரணமாக ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு விநியோகிப்பதில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் (Technological Issues) ஏற்பட்டதால் அந்தத் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளதால், தற்போது ஏடிஎம் இயந்திரங்களைப் பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு ஏற்ப எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாலிமர் ரூபாய் நோட்டுகளை முழுமையாகப் பயன்படுத்தி வரும் வேளையில், இந்தியாவும் இந்த டிஜிட்டல் மற்றும் நவீனப் பொருளாதாரப் புரட்சிக்குத் தற்போது தயாராகி வருகிறது.

    English Summary

    RBI Governor Sanjay Malhotra announced that a proposal to introduce durable polymer plastic currency notes is under consideration to curb rising paper printing costs, assuring the public that the plan is in its preliminary stages and current paper notes will remain fully valid. இந்தியாவில் காகித நோட்டுகளுக்குப் பதிலாகப் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகக் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ள நிலையில், தற்போதைய ரூ.500 உள்ளிட்ட காகித நோட்டுகள் செல்லாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.