தர்மேந்திர பிரதான் ஓவர்! அடுத்த 2 அமைச்சர்களிடம் ராஜினாமா கேட்கும் எதிர்க்கட்சிகள்.. மேட்டர் இதுதான்

  • சண்டிகர்: தொடர் போராட்டங்களால் 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றம்சாட்டில் தற்போது பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த கல்வித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறது. இவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக ஹர்ஜோத் சிங் பைன்ஸ் உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சராக பல்பிர் சிங் உள்ளார்.

    Advertisement

    இவர்கள் 2 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பஞ்சாப்பில் உள்ள காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் மற்றும் பாஜக கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

    அதாவது பஞ்சாப்பில் தொடர்ந்து பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 2025 டிசம்பர் 21ம் தேதி பஞ்சாப் துணை பணிகள் தேர்வு வாரியம் குரூப் பி தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஜூலை 19-20ம் தேதிகளில் பாபா ஃபரிட் யூனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் சார்பில் பார்மசி ஆபிசர்ஸ் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது.

    Advertisement

    அதற்கு முன்பாக தாசில்தார், பஞ்சாப் ஆசிரியர் தகுதி தேர்வு, 12ம்வகுப்புக்கான ஆங்கில தேர்வு உள்ளிட்டவற்றின் வினாத்தாள்கள் கசிந்தன. இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ், சுகாதாரத்துறை அமைச்சராக பல்பிர் சிங் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தற்போது எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா கூறுகையில், ''நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். அதனை வரவேற்கிறோம். இது மாணவர்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் பதவி விலக வேண்டும்.

    Advertisement

    இதுதொடர்பாக சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில், '' கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் , சுகாதாரத்துறை அமைச்சராக பல்பிர் சிங் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். தாசில்தார், பஞ்சாப் ஆசிரியர் தகுதி தேர்வு, 12ம்வகுப்பு ஆங்கில தேர்வு விவசாய மேம்பாட்டு அதிகாரி, பஞ்சாப் துணை பணிகள் தேர்வு வாரியம், பார்மஸி அதிகாரிக்கான தேர்வு என்று தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளில் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதனால் இந்த 2 அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார். அதேபோல் இந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பஞ்சாப் பாஜகவினரும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட பிற எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தர்மேந்திர பிரதான் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த வகையில் தான் பஞ்சாப் அமைச்சர்கள் 2 பேரிடம் ராஜினாமா கேட்கின்றனர் அம்மாநில எதிர்க்கட்சியினர். என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Following sustained protests, Union Education Minister Dharmendra Pradhan resigned yesterday, accepting responsibility for the NEET question paper leak. Meanwhile, opposition parties in Punjab have raised a strong demand for the resignation of the Aam Aadmi Party's Education and Health Ministers over allegations related to a question paper leak; here, we examine the background of this situation.