சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸில் இருந்து புறப்பட்ட ரயிலின் 4 பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிகிறது.
நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். பெரும்பாலான மக்கள் ரயில்கள் மூலமாகவே சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், பெரும்பாலான ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸில் இருந்து புறப்பட்ட ரயிலின் 4 பெட்டிகளில் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. அமிர்தசரஸில் இருந்து மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரயில் எண் 12508 கர்மபூமி எக்ஸ்பிரஸ், இன்று வழக்கம்போல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பஞ்சாபில் உள்ள சராய் பஞ்சாரா ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயிலின் சில பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. பசந்த்புரா ரயில் நிலையம் அருகே ராஜ்புரா நகர் என்ற பகுதியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் இன்ஜினில் இருந்து ஐந்தாவது பெட்டியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அடுத்தடுத்து 4 பெட்டிகளில் தீ பரவியதாக கூறப்படுகிறது. ரயில் பெட்டிகளில் இருந்து தீப்பிழம்புகளும் கரும்புகையும் வெளியேறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், நல்வாய்ப்பாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ரயில் பெட்டிகளில் தீப்பிடித்ததை கண்ட பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.