சென்னை: நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் 2 மணி நேரத்திற்கும் மேல் பட்ஜெட்டை வாசித்திருந்தார். ஆனால், நிதிநிலை அறிக்கையில் 10 திட்டங்களுக்கு பெயர் மாற்றப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஏற்கெனவே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை தவிர, புதிய திட்டங்களை தவெக அரசு கொண்டு வரப்படுமா? என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு பெயரை மட்டும் மாற்றியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் திமுக அரசால் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகிக்க திட்டமிடப்பட்டு, 10 லட்சம் மாணவர்களுக்கு முதல்கட்டமாக லேப்டாப் கொடுக்கப்பட்டது. லேப்டாப் எனில் சும்மா சாதாரண, பேசிக் லெவல் லேப்டாப் கிடையாது. 8 GB RAM உடன் அசத்தலான வடிவமைப்புடன் லேப்டாப்கள் விநியோகிக்கப்பட்டன. இன்றை தேதியில் சந்தையில் இந்த லேப்டாப்பை வாங்க குறைந்தது ரூ.50,000 செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த திட்டத்தின் பெயர் 'வெற்றி மடிக்கணினி' திட்டம் என மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தியாவில் முதல்முறையாக அரசு சார்பில் மிக குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளும் கூடிய கோ-வொர்கிங் ஸ்பேஸ் கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. 'முதல்வர் படைப்பகம்' என்கிற பெயரில் இது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தது. வெறுமென பகிர்ந்த பணியிட மையமாக மட்டும் இது இல்லாமல், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட டிஜிட்டல் நூலகமாகவும் இது இருக்கிறது. தற்போது இந்த திட்டத்தின் பெயர் 'டிஜிட்டல் நூலகம்' என்று மாற்றப்பட்டிருப்பதாக திமுகவினர் விமர்சித்துள்ளனர். இதுபோக, விலையில்லா சைக்கிள் திட்டம் என்கிற பெயர், 'நவீன மிதிவண்டி திட்டம்' என்று மாற்றப்பட்டிருக்கிறது. பெயர் மாற்றம் மட்டுமல்லாது, இந்த திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் சைக்கிள்களின் தரமும் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய சைக்கிள்கள் விநியோக்கிக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அமைச்சர் கூறியிருக்கிறார். மேலும் அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகளின் பெயர்களை, காமராஜர் சிறப்பு பள்ளி என்று மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் 'நான் முதல்வன் திட்டம்'. பள்ளி, கல்லூரி மாணவர்களின் தனித்திறனை அடையாளம் கண்டு கல்வி மற்றும் வாழ்க்கையில் சிறந்தவர்களாக மாற்ற இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சியையும் பெற்றிருந்தனர். இப்படி இருக்கையில் இந்த திடத்தின் பெயர் 'வெற்றி திறன் பயிற்சி திட்டம்' என மாற்றப்பட்டிருக்கிறது. இவை தவிர, ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் பெயர், 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்' என்றும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பெயர் 'வெற்றி வீடு வழங்கும் திட்டம்' என்றும், அயோத்திதாசர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் பெயரும், அன்பு சோலை திட்டத்தின் பெயர், முதியோர் பொழுதுபோக்கு திட்டம் என்றும், நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டத்தின் பெயர் 'மண்ணின் மகள் திட்டம்' என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. பழனி கோயில் நில மோசடி, மின்வெட்டு, EB பில், அரசு பள்ளிகளில் மாணவர்களை கட்சி பெயர் சொல்ல வைத்தது, நீட் தேர்வு போராட்டத்தில் மௌனம், காவிரி நீர் விவகாரம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதைப்பற்றியெல்லாம் பேசாமல், 2 மணி நேர உரையில் 10 திட்டங்களின் பெயர்களை மாற்றதான் முடிந்ததா? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.திட்டங்களின் பெயர் மாற்றம்
முதல்வர் படைப்பகம்
நவீன மிதிவண்டி திட்டம்
நான் முதல்வன் திட்டம்
வெற்றி வீடு வழங்கும் திட்டம்
பெயர் மாற்றம் மட்டுமா?