ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி.. அதிகாரிகளுக்கு ஃபாரின் சரக்கு! அதிர வைத்த அரசகுமார்! சிக்கும் தலைகள்

  • சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் மதுவிருந்து அளித்தது, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் வசூலித்தது உள்ளிட்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    பள்ளி அங்கீகாரம்

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    பிடி அரசகுமார்

    இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் அரசகுமார் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மதுவிருந்து ஏற்பாடு செய்ததாகவும், அதன் மூலம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் என்று விசாரணை வட்டாரங்கள் கூறுகின்றன.

    லஞ்சத் தொகை

    மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையில் முக்கிய பதவிகளில் இருந்த சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சத் தொகைகள் குறித்த தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் கூடுதல் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் மேலும் தெரியவந்த முக்கிய தகவலின்படி, சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை (Digital Transaction) மூலமாக பணம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    டிஜிட்டல் பரிவர்த்தனை

    இதற்கான வங்கி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகுமார் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம், கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கல்வித்துறை அதிகாரிகள் மீதும் விசாரணையை விரிவுபடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    சிக்கும் தலைகள்

    இந்த வழக்கில் மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், நிதி பரிவர்த்தனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்த ஒரு அமைச்சர் மற்றும் சில எம்எல்ஏக்களும் இந்த விவகாரத்தில் சிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் அரசகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு அதில் கிடைக்கும் ஆவணங்கள் மூலம் அடுத்த கட்டமாக பெரிய தலைகளை தட்டி தூக்க காவல்துறை தயாராகி வருகிறது என்கின்றனர்.

    English Summary

    Police widen the ₹100 crore private school approval scam probe as digital transactions and alleged links with officials come under scrutiny.