சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 100 சார்-பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் இனி சார்-பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 01.11.2026 முதல் சனிக்கிழமைகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கைவிடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், " அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாளன்று சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவும், அந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் அதன் வேலைப்பளுவிற்கு தகுந்தாற்போல் தேவையான பணியாளர்கள் பணிபுரிய சம்பந்தப்பட்ட மாவட்டப்பதிவாளர்களுக்கு உத்தரவிடவும் பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி அளித்து 2022ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் 07.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் 2026-27-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை எண்.11ன் படி, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு விவாதத்தின் போது "வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும" என்று வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பதிவுத்துறை தலைவரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில், தற்போது "எங்கிருந்தும் பதிவு" என்னும் குறிக்கோளை நோக்கி முன்நகர்கிறது , சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றி, பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவு மேற்கொள்ளப்படுவதால், தொடர்ந்து அலுவலகப்பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலங்களில் அனைத்து ஆவணங்களும் வருகையில்லா பதிவு மற்றும் காகிதமில்லா முறையில் பதிவு மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால், சார்பதிவாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதிவு சேவைகளின் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையினை கைவிடலாம் என்றும், வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் 07.09.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பினை 01.11.2026 முதல் செயல்படுத்த ஏதுவாகவும், மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உரிய ஆணை வெளியிடுமாறு பதிவுத்துறை தலைவர் அரசைக் கேட்டுக் கொண்டு கொண்டிருக்கிறார். எனவே பதிவுத்துறை தலைவரின் கருத்துருவினை கவனமாக பரிசீலனை செய்தபின், அவரின் கருத்துருவினை ஏற்று 2026-2027 ஆம் ஆண்டு பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் 07.09.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பான 'வருகையில்லா ஆவணப் பதிவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் என்பது தொடர்பான அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையை இரத்து செய்து, தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள சனிக்கிழமை கட்டாயப் பணி முறையை 01.11.2026 முதல் கைவிடலாம் என அரசு முடிவு செய்து, அவ்வாறு ஆணையிடப்படுகிறது" இவ்வாறு குமரகுருபன் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தஅரசாணையின் படி, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது.