சென்னை: சென்னை ஆவடி அருகே பல வருடங்களாகவே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க அதிகாரிகள் துரிதமாக களமிறங்கியிருக்கிறார்கள்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவின்படி, அங்கு செயல்பட்டு வந்த 105 வணிகக் கடைகள் மற்றும் வீடுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று நோட்டீஸ் வழங்கியிருப்பது, ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புறம்போக்கு நிலம் என்பது தனிநபர் யாருக்குமே சொந்தமில்லாத நிலம். அதாவது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுப் பயன்பாட்டு நிலமாகும். ஏரிகள், ஆறுகள், பாதைகள், மயானங்கள், மலைகள் போன்ற இயற்கை வளங்கள் அனைத்துமே பொது இடங்கள் ஆகும்..
இந்த நிலங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்களின் பொதுவான தேவைகளுக்காகவும் பயன்படுகின்றன; சுருக்கமாகச் சொன்னால், இது பொதுமக்களின் நலனுக்காக அரசு பராமரிக்கும் பொது சொத்துக்குதான் புறம்போக்கு நிலம் என்று பெயர். எனவே இந்த நிலத்தை பயன்படுத்தக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனாலும் சிலர் அந்த விதிமுறையை மீறிவிடுகிறார்கள். இப்போதுகூட சென்னையில் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. ஆவடி அருகே நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை அதிரடியாக ஆக்கிரமித்திருந்த 105 பேருக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அதிரடி நோட்டீஸ் வழங்கி, அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். ஆவடி அடுத்துள்ளது பருத்திப்பட்டு கிராமம்.. இங்குள்ள எம்ஜிஆர் நகர் பிரதான சாலையில் சுமார் 4.56 ஏக்கர் பரப்பளவில், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கரை வகைப்பாடு கொண்ட நீர்நிலை அரசு புறம்போக்கு நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலம் பொதுமக்கள் எல்லாருக்குமே சொந்தமான ஒரு பொது சொத்தாகும். ஆனால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிலம், கடந்த பல வருடங்களாகவே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அங்கு சாதாரணமாக வீடுகள் மட்டும் கட்டப்படவில்லை, மாறாக, மெடிக்கல் ஷாப், ஜூஸ் கடை, துணிக்கடை, ஏடிஎம் மையம், ஹார்டுவேர்ஸ், ஓட்டல் என்று பல்வேறு வணிக ரீதியிலான கடைகளும், வீடுகளும் முளைத்து, ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல அந்த பகுதியே டோட்டலாக மாறியிருந்தது. மொத்தம் 105 ஆக்கிரமிப்புகள் அங்கு விஸ்வரூபம் எடுத்திருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நீர்வளத்துறை சார்பில் ஏற்கனவே முதற்கட்டமாகப் படிவம்-3 நோட்டீஸ் வழங்கப்பட்டு வார்னிங் தரப்பட்டிருந்தது. ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்கள் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை உத்தரவின்படி, இந்த நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அரசு அதிகாரிகள் இப்போது அதிரடியாக களமிறங்கியுள்ளனர்.. நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரி தலைமையிலான வருவாய்த்துறையினர், ஆக்கிரமிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் நேரில் சென்று இறுதி நோட்டீஸை நேற்று வழங்கியிருக்கிறார்கள்.. இந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க ஆவடி போலீசாரும் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.. தற்போது வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களாகவே முன்வந்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றத் தவறும்பட்சத்தில், அரசே ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் என்றும், அதற்காக ஆகும் முழு செலவுத் தொகையையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தே சட்டப்படி வசூலிக்கும் என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புப் பகுதிக்கு பக்கத்திலேயே பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் முக்கிய போக்குவரத்துப் பகுதிகளான "லாங் டிஸ்டன்ஸ் பஸ் & ரயில்" (Long Distance Bus & Rail) நிலைய வழித்தடங்களும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையானது, அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...!!புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
சென்னை ஆவடி அரசு நிலம்
நீர்வளத்துறை அதிரடி
போலீஸ் பாதுகாப்புடன் நோட்டீஸ்