சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்!

  • சென்னை: மாணவன் இறந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும், வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவன், 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற நிலையில், பின்னர் அவரது சடலம் முட்புதர் குட்டையில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக் கோரியும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி சம்மன் அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.

    Advertisement

    மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது. இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.

    குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Leader of the Opposition Udhayanidhi Stalin has criticized the police, stating that even twelve days after the student Tamilselvan's death, they are focused on suppressing protests and filing cases rather than apprehending the culprits.