புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு.. போராட்டத்தில் இறங்கத் தயாராகும் 12 மீனவ கிராம மக்கள்!

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 15 ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டிடம் சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கடலோரப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் அது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சம்பந்த மாக போராட்டக்களத்துக்கு செல்லவும் மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

    பட்டினப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவக் கிராம மக்களின் முதன்மை வாழ்வாதாரமாக விளங்குவது அவர்களின் படகுகள் நிறுத்துமிடம், வலைகளைப் பராமரிக்கும் பகுதிகள் மற்றும் மீன் விற்பனைச் சந்தைகளே. இப்பகுதியில் தலைமைச் செயலகம் வரும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும் சூழல் உருவாகும். மேலும், பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் குடும்பங்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படும்.

    Advertisement

    ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தும், அரசு பட்டினப்பாக்கத்தை குறி வைத்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீனவ அமைப்புகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

    புதிய தலைமைச் செயலக திட்டத்தால் முள்ளிக்குப்பம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமில் குப்பம், நொச்சி நகர் உள்பட 12 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படு வார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். முள்ளிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    Advertisement

    அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மீனவர்களின் நிலை குறித்து ஆலோசனை செய்ய வருகிற 15 ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Residents of 12 fishing villages have decided to launch a protest against the proposal to construct the new Secretariat in Chennai's Pattinapakkam. A consultative meeting regarding this matter is scheduled to be held in on 15th.