திருப்பதி: தெலுங்கானாவில் போலீஸ் ரோந்து வாகனம் வந்ததால் பயந்து ஓடியபோது, வயல்வெளியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மொய்னாபாத்தில் கே.ஜி. ரெட்டி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மாணவர்கள் பலர் கல்லூரிக்கு அருகிலுள்ள வயல்வெளிகளில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
அந்த நேரத்தில், ஒரு போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்துள்ளது. போலீஸ் வாகனத்தைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். அப்போது ஒரு வயலில் பதிக்கப்பட்டிருந்த மின் கம்பிகள் தாக்கியதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் அட்டப்பூரைச் சேர்ந்த மோக்ஷா சாய் சரண் (20) மற்றும் பால்கம்பேட்டையில் வசித்து வந்த யஷ்வந்த் (20) என அடையாளம் காணப்பட்டது. சக மாணவர்கள் உடனடியாக இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இந்தச் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாய நிலங்களைச் சுற்றி விவசாயிகள் அமைத்த மின்சார வேலியில் மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலியானதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக, விவசாய நிலங்களைச் சுற்றி மின்மயமாக்கப்பட்ட ஜிஐ கம்பிகளையோ அல்லது மின்சார வேலிகளையோ நிறுவ வேண்டாம் என்று மின்சார வாரியம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபோன்ற அபாயகரமான நடைமுறைகள் விவசாயிகள், வழிப்போக்கர்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, உயிரிழப்புக்கும் வழிவகுக்கக்கூடும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.