2 தமிழக அமைச்சர்கள் நீக்கம்? அமைச்சரவையை மாற்ற விஜய் மெகா பிளான்! விசிக - ஐயூஎம்எல்விற்கு ஜாக்பாட்?

  • சென்னை: தமிழக அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சர்ச்சைகளில் சிக்கிய ஒரு பெண் உள்பட 2 அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய பரபரப்பான தகவல் வருமாறு:

    Advertisement

    தமிழகத்தை எடுத்து கொண்டால் முதல்வர் + 34 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். தற்போது தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. விஜய் முதல்வராக இருக்கும் நிலையில் 34 பேர் அமைச்சர்களாகி விட்டனர். இதனால் புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றால் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரை நீக்கம் செய்ய வேண்டும்.

    Advertisement

    இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தனது அமைச்சரவையை மாற்றம் செய்வது பற்றிய யோசனையில் இறங்கி உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இணைந்த நிலையில் அவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் புதிதாக அமைந்த தவெக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைகள் சூழ்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இந்த விஷயம் பற்றி விஜய் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி, முதற்கட்டமாக தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள 2 அமைச்சர்களை நீக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பெயராக தாம்பரம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏவான சரத்குமாரின் பெயர் உள்ளது. இவர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பார்த்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தவெக அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதல் ஆளாக சரத்குமார் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதற்கு அ்டுத்ததப்படியாக சமூக நலம் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ராக்கெட் ராஜாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது சர்ச்சையை கிளப்பியது.
    அதேபோல் விருதுநகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேடை பேனரில் கீர்த்தனாவின் பெயர் முதலில் இடம்பெற்றிருப்பதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இதில் தவெக தலைமை அதிருப்தியாகி உள்ளது. அமைச்சர்கள் சரத்குமார் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்த 2 விவகாரங்களையும் அவர்கள் கையாண்ட விதத்தால் கட்சி மேலிடம் அதிருப்தியாகி உள்ளது. இதனால் இருவரிடமும் இருந்தும் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இவர்களுக்கு பதில் அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். அதன்படி விராலிமலை தொகுதியின் மாஜி எம்எல்ஏ சி விஜயபாஸ்கர், கரூர் மாஜி எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர், அம்பை முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டவர்களில் இடைத்தேர்தலில் வென்று வரும்பட்சத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் தவெகவின் சேலம் தெற்கு தொகுதியின் எம்எல்ஏ விஜய் தமிழன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏஎம் ஷாஜகான் ஆகியோரின் அமைச்சர்கள் பதவிகளும் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராக உள்ளார். திண்டிவனம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் வன்னியரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ளார். தங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வழங்க வேண்டும் விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களின் துறைகளில் மாற்றம் செய்வது பற்றி யோசனை உள்ளது..

    Advertisement

    இருப்பினும் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவகாரம் தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் 4 மாதத்தில் இடைத்தேர்தல் நடக்கும். இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அமைச்சரவையை மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் தவெகவின் மூத்த நிர்வாகிகள்.

    English Summary

    Tamil Nadu cabinet Reshuffle: Reports indicate that Chief Minister Vijay has decided to reshuffle the Tamil Nadu cabinet. According to these reports, two ministers-including a woman embroiled in controversy-are set to be dropped to make way for new faces, while ministers from the VCK and the Indian Union Muslim League are expected to be allocated additional portfolios.