டாஸ்மாக்கில் கான்ட்ராக்ட்.. அமைச்சர் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த தவெக நிர்வாகிகள் கைது

  • சென்னை: லஞ்சம் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் தவெக நிர்வாகிகளே ஏராளமான மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர் விக்னேஷின் பெயரை பயன்படுத்தி, டாஸ்மாக்கில் கான்ட்ராக்ட் பெற்று தருவதாக தவெக நிர்வாகிகளே மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக 2 தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷின் முதுநிலை நேர்முக உதவியாளர் சுரேஷ் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர், தவெக அருப்புக்கோட்டை மேற்கு நகர செயலாளர் சதீஸ்குமார் மற்றும் தென்மேற்கு நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் போக்குவரத்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

    Advertisement

    3 பேர் மீது வழக்கு

    அமைச்சர் பெயரை சொல்லி அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கேவிஆர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சௌந்தரராஜன் என்பவரிடமிருந்து ரூ.21,99,800/- பெற்று மோசடி செய்துள்ளனர். அமைச்சர் விக்னேஷின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் சதீஸ்குமார், கார்த்திகேயன், பிரசாந்த் உத்தமன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து விக்னேஷ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "காவல்துறை விசாரணையில் இந்த நபர்கள் என் பெயரை தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைய முயற்சித்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் தவெக நிர்வாகிகளான சதீஸ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். தலைமறைவாக உள்ள பிரசாந்த் உத்தமனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை

    திமுக ஆட்சியில் அரசுத்துறைகளில் பல்வேறு முறைகேடுகள் காணப்பட்டன. அப்போதைய மதுவிலக்குத்துறை அமைச்சர், அவரது சகோதரர் உள்ளிட்டோர் பார்டி பண்ட் என்கிற பெயரிலும், இதர வகைகளிலும் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தனர். அத்துறையில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் காணப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீதான புகார்கள் உண்மையாக இருந்தபோதிலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    எனவே, அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக நல்ல நிர்வாகத்தை தருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசைப் பொறுத்தவரை அரசின் பெயரையோ, அமைச்சர்களின் பெயரையோ தவறாகப் பயன்படுத்தியும் மற்றும் இதர வகைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    2 TVK Persons misused Minister Vignesh name and involved scam for tasmac contract. Virudhunagar police arrested 2 TVK cadres.