சென்னை: சுங்கச்சாவடி வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது... இதன் மூலம் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.1200 வரை சேமிக்க வாய்ப்பு இருக்கிறது. தினமும் ஒரே சுங்கச்சாவடியைக் கடந்து செல்பவர்களுக்கு இது எப்படி உதவும்? மாதம் ரூ.350 கட்டுவதற்குப் பதிலாக, ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் போதுமா? இந்தப் புதிய திட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், சுங்கச்சாவடிக்கு அருகிலேயே வீடு இருப்பவர்கள் வேலை, தொழில் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக ஒரே சுங்கச்சாவடியை அடிக்கடி கடக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்படி அடிக்கடி பயணம் செய்பவர்கள் ஒவ்வொரு முறையும் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, உள்ளூர் மக்களுக்கான மாதாந்திர பாஸைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்கெனவே இருக்கிறது. சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் தகுதியானவர்கள், வணிக நோக்கமற்ற தங்களுடைய சொந்த வாகனங்களுக்கு இந்தப் பாஸை பயன்படுத்தலாம். இப்போது இந்த உள்ளூர் பாஸுக்கு மாதம் ரூ.350 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் பாஸைப் புதுப்பிக்க வேண்டியிருப்பதுடன், அதற்கான கட்டணத்தையும் தொடர்ந்து செலுத்த வேண்டியுள்ளது. இந்தச் சிரமத்தைக் குறைக்கத்தான் வருடாந்திர பாஸ் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. தற்போதைய மாதாந்திர பாஸுக்கு ரூ.350 செலுத்தினால், 12 மாதங்களுக்கான மொத்த செலவு ரூ.4200 ஆகிறது. ஆனால் புதிதாகஅதிட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர உள்ளூர் பாஸுக்கு சுமார் ரூ.3,00 கட்டணம் நிர்ணயிக்கப்படுமாம்.. ஒருவேளை இந்தத் தொகை இறுதி செய்யப்பட்டால், 1 வருஷத்துக்கு ரூ.1200 மிச்சமாகும். அதாவது, இப்போதைய மாதாந்திர பாஸ் கட்டணத்துடன் ஒப்பிடும்போது சுமார் 28 சதவீதம் வரை சேமிக்க முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பாஸைப் புதுப்பித்தால் போதும். மாதந்தோறும் புதுப்பிக்கும் வேலை குறைவதுடன், அடிக்கடி சுங்கச்சாவடியைக் கடந்து செல்பவர்களுக்கான செலவும் குறையும். இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் தகுதியான வாகனங்கள் 200 முறை வரை சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வகையில், ரூ.3,075 கட்டணத்தில் தனி வருடாந்திர பாஸ்ட் டேக் வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸ் 2025 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இப்போது கொண்டுவரப்போவது அதிலிருந்து வேறுபட்டது... சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகள், தங்களுடைய வழக்கமான சுங்கச்சாவடியை அடிக்கடி கடந்து செல்லவே இந்தப் புதிய வருடாந்திர உள்ளூர் பாஸ் திட்டமிடப்படுகிறது. இந்த உள்ளூர் வருடாந்திர பாஸ் நடைமுறைக்கு வந்தால், பதிவு செய்த குறிப்பிட்ட சுங்கச்சாவடியை ஒரு வருடத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கடந்து செல்லும் வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நாடு முழுவதும் உள்ள எல்லா சுங்கச்சாவடிகளிலும் பயன்படுத்தக்கூடிய பாஸ் கிடையாது. தற்போது சுமார் 300 சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கான டிஜிட்டல் மாதாந்திர பாஸ் வசதி உள்ளது. ராஜ்மார்க் யாத்ரா செயலி மூலமாகவும் இதைப் பெறலாம். புதிய வருடாந்திர பாஸ் திட்டத்தையும், தேவைப்படும் அடிப்படையில் 1,150 சுங்கச்சாவடிகளிலும், புதிதாக அமைக்கப்படும் சுங்கச்சாவடிகளிலும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பாஸ் பெறுபவர்களின் முகவரி, வாகன விவரங்கள், பாஸ்டேக் ஆகியவை சரிபார்க்கப்படும். சுங்கச்சாவடி ஊழியர்களுடன் உள்ள பழக்கத்தைப் பயன்படுத்தி, சிலர் முறையான பாஸ் இல்லாமல் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்வதாக புகார்கள் முளைப்பதால், புதிய கட்டண வசூல் முறையில் இதற்கான வாய்ப்பு குறையும். மேலும், கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின்னணு நோட்டீஸ் வரலாம்.. சில சூழல்களில் டபுள் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உள்ளூர் பாஸ் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, உள்ளூர் மக்களுக்கு கட்டணச் சலுகை வழங்குவதால் சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுசெய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வருடாந்திர பாஸ் திட்டத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், ரூ.3,000 கட்டணம், விண்ணப்ப நடைமுறை, அமலுக்கு வரும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே உறுதியாகும்..சுங்கக் கட்டணம் - மாதாந்திர பாஸ்
மாதம் ரூ.350 தேவையா
ரூ.3,075 வருடாந்திர பாஸ்
பாஸ் வாங்காவிட்டால் அபராதம்