சென்னை: 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணும் இயந்திரத்தில் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் உள்ளக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் என்ற புலனாய்வு ஊடக அமைப்பு நடத்திய தேர்தல் தணிக்கை ஆய்வில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் நடக்கும் நாளில் ஒரு வாக்குச்சாவடிக்குள் எத்தனை வாக்காளர்கள் உள்ளே வந்து வாக்களித்தார்கள் என்பதை அதிகாரிகள் படிவம் 17A (வாக்காளர் பதிவேடு) மூலம் வரிசையாகப் பதிவுசெய்வார்கள். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளும் இந்தப் பதிவேட்டின் எண்ணிக்கையும் துல்லியமாக ஒத்துப் போகவேண்டும். சட்டப்படி இந்த இரண்டு எண்ணிக்கைகளும் ஒன்றாக இருக்க வேண்டும்; அப்படி மாறினால் தேர்தல் முறைகேடு அல்லது போலி வாக்குப்பதிவு நடந்திருக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற 530 தொகுதிகளின் 4,212 அதிகாரப்பூர்வ தாள்களை ஆய்வு செய்ததில், 51 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் கடுமையான குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 51 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வாக்களிக்க எத்தனை பேர் உள்ளே வந்தார்கள் என்ற எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகளே பதிவு செய்யவில்லை. அந்த இடத்தில் '0' அல்லது எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், ஒன்று அந்தத் தொகுதியில் யாருமே ஓட்டு போடவில்லை அல்லது தேர்தல் அதிகாரிகள் போலியாக ஆவணங்களைத் தயார் செய்துள்ளனர். இந்த ஆவணங்களை முழுமையாகப் பரிசோதித்துப் பார்க்காமலேயே தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவித்துள்ளது. இதில் 10 தொகுதிகள் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் உள்ளன; அவற்றில் 7 தொகுதிகளில் பாஜக அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்ற 32 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஹரியானாவின் பட்கல் தொகுதி: தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்களின்படி இங்கு 3.32 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் இயந்திரத்தில் வெறும் 1.60 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. அதாவது 1.72 லட்சம் வாக்குகளின் கணக்கு விடுபட்டுள்ளது. இங்கு பாஜக வேட்பாளர் வெறும் 6,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவின் மும்பை வடக்கு தொகுதி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் போட்டியிட்டு வென்ற இந்தத் தொகுதியில், ஆவணங்களின்படி 18.11 லட்சம் வாக்குகள் பதிவானதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவிலோ 10.33 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவானதாகக் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7.78 லட்சம் வாக்குகள் இயந்திரத்தில் எண்ணப்படவில்லை. ஹரியானாவின் கைத்தல் தொகுதி: இங்கு வெறும் 215 பேர் மட்டுமே வாக்களித்ததாக உள் தணிக்கை ஆவணம் கூறுகிறது. ஆனால் இயந்திரத்திலோ 1,67,285 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் தொகுதி: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 6,66,046 வாக்குகள் பதிவான நிலையில், 6,72,942 வாக்குகள் எண்ணப்பட்டு, 6,896 கூடுதல் வாக்குகள் வந்திருப்பது தெரியவந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு வரை வாக்குச்சாவடி வாரியான முழு விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளிப்படையாக வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டபோது, ஆவணங்களை வெளியிட்டால் அமைதி கெடும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது. மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தேர்தல் ஆவணங்களையும் சிசிடிவி காட்சிகளையும் வழங்க உத்தரவிட்ட சில நாட்களிலேயே, தேர்தல் விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்து இந்த ஆவணங்களைப் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்திலோ அல்லது வெளியிலோ பெற முடியாதபடி தடை செய்தது. ஒரு வங்கியில் பணம் டெபாசிட் செய்த கணக்கும், பணத்தை எடுத்த கணக்கும் தெரியவில்லை என்றால் வங்கி மீது சந்தேகம் எழுவது இயல்பு. அதேபோல, மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் உள் கணக்குகளிலேயே லட்சக்கணக்கான வாக்குகள் முரண்படுவது இந்திய ஜனநாயக அமைப்பில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.கணக்கில் வராத வாக்குகள்: நடந்தது என்ன?
பூஜ்ஜியம் ('0') எனப் பதிவான தொகுதிகள்
லட்சக்கணக்கில் மாயமான ஓட்டுகள்
பொதுமக்கள் பார்க்கத் தடை