215 சார்-பதிவாளர்கள் டிரான்ஸ்பரில் தமிழக அரசு அசத்தல்.. பணமும் இல்லை, சிபாரிசும் இல்லை

  • சென்னை: தமிழக பதிவுத்துறை வரலாற்றில் முதன்முறையாக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற குறுகிய காலத்திலேயே 215 சார்பதிவாளர்களுக்கு எந்தவித முறைகேடும் இல்லாமல், நியாயமான முறையில் இந்த பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

    Advertisement

    சொந்தமாக ஒரு வீடு அல்லது சிறு நிலமாவது வாங்கிவிட வேண்டும் என்பதுதான் சராசரி மனிதர்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஆனால் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, பத்திரப்பதிவு செய்யப் போனால், அங்கே சார்-பதிவாளர் ஆபீஸ்களில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

    Advertisement

    தமிழக பதிவுத்துறை

    ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் மூலமாக இந்த லஞ்ச வசூல் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதாக மக்கள் வேதனையோடு தெரிவித்து வந்தனர்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவு செய்ய வரும் மக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களை உட்கார வைத்துப் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் யாரும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தங்களது பத்திரப்பதிவை எப்படி செய்வது என்பது குறித்த புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பதிவுத்துறை அலுவலர்கள் சங்கமே தொடங்கியுள்ளது. அதோடு, பொதுமக்கள் தங்களின் பத்திரப்பதிவை சுமுகமாக முடிக்க சில வழிமுறைகளையும் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Advertisement

    ஸ்டார் 3.0 வசதிகள்

    "பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற தவறான எண்ணத்தை மக்கள் முதலில் கைவிட வேண்டும். ஆன்லைனில் டோக்கன் வாங்கி, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குத் தாமதமில்லாமல் சார்-பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் அவசரப்படுத்துவதைத் தவிர்த்து, ஊழியர்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பதிவுத்துறையில் புதிதாக அறிமுகமான STAR 3.0 மென்பொருள் முறையைப் பயன்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் சார்-பதிவாளர்கள் தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு டிரான்ஸ்பர் கேட்க வேண்டுமானால், பல மட்டங்களில் பெரிய தொகையை லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. ஆனால், சமீபத்திய இடமாற்றத்தில் எந்தவிதமான பண பரிமாற்றமும், சிபாரிசும் இல்லாமல் முற்றிலும் நேர்மையான முறையில் 215 சார்-பதிவாளர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    லஞ்சம் இல்லாமல் டிரான்ஸ்பர்

    தங்களுக்கு நேர்மையான முறையில் டிரான்ஸ்பர் கிடைத்துள்ளதால், அலுவலர்களும் பணியாளர்களும் மக்களிடம் எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்ற குறுகிய காலத்திலேயே எந்தவிதமான முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் இந்த பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.

    அரசின் இந்த அதிரடி உத்தரவுகள் மற்றும் புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் காரணமாக, இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணம் கேட்டு மக்களை வற்புறுத்துவது கணிசமாகக் குறைந்துள்ளதாக தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலும் வரவேற்றுள்ளது. இந்த மாற்றங்கள் பத்திரப்பதிவுத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது..

    English Summary

    215 Sub-Registrars Transferred in Tamil Nadu Without Money or Recommendations