சென்னை: 2026-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 6,574 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டியிடுகிறார்கள். குரூப் 4 தேர்வுக்கு பொது ஆங்கிலம் நீக்கப்பட்ட பிறகு ஏராளமானோர் விண்ணப்பிப்பது குறைந்துள்ளது. அதேபோல் விண்ணப்பித்தவர்களுமே, பொதுத்தமிழ் விவகாரத்தில் அவுட் ஆப் சிலபஸில் இருந்து கேள்விகளை கேட்பதாகவும், அதேபோல் சரியான ஒழுங்குமுறையுடன் கேள்விகள் கேட்பது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.
2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர், 1,572 தட்டச்சர் 404 சுருக்கெழுத்து தட்டச்சர், 60 நேர்முக எழுத்தர், 40 வனக்காவலர் மற்றும் முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் என மொத்தம் 6 ஆயிரத்து 574 குரூப் 4 காலி இடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ந்தேதி வெளியிட்டது. அதற்கான விண்ணப்பப் பதிவும் நேற்று முன்தினம் வரை நடந்தது. முன்னதாக குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக கடந்த நவம்பர் 5-ந்தேதி முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பை அரசு அதிகரித்தது. இதன் காரணமாக அவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க ஏதுவாக கடைசி தேதியை 8-ந்தேதியாக மாற்றி டிஎன்பிஎஸ்சி மாற்றியது. மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஒரு பணியிடத்துக்கு 226 பேர் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். கடந்த 4-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதனைத்தொடர்ந்து 4 நாட்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றுவிட்டது. விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வருகிற 11-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ந் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் பலர் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், பொதுத்தமிழ் என்பதற்கான அகராதி என்ன.. வரைமுறை என்ன என்பதை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும். ஏதாது ஒரு புத்தகத்தில் கேள்விகேட்பது தவறு.. பாட்டத்திட்டத்தின் படி தான் கேள்விகள் கேட்க வேண்டும். ஏனெனல் பொதுத்தமிழில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெறாவிட்டால் மற்ற பகுதிகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. எனவே பொதுத்தமிழ் வெறும் தகுதித் தேர்வு கிடையாது. அது தரவரிசையையும் தீர்மானிக்கிறது. எனவே அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.