சென்னை: கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ரூ.1.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் 24 பொறிவைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அலுவல் ரீதியான பணிகளைச் செய்வதற்காக ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டு பெற்ற அரசு ஊழியர்கள் (இணை ஆணையாளர் அறநிலையத்துறை, வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், உதவி மின் பொறியாளர், மின் வாரிய வணிக ஆய்வாளர், சமூக நல விரிவாக்க அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், இரண்டாம் நிலை காவலர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர்) 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சை, ராணிப்பேட்டை, சென்னை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 13 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.13 லட்சத்து 39 ஆயிரத்து 80 கைப்பற்றப்பட்டது. மேலும் மாநில எல்லைகளில் அமைந்துள்ள 6 வாகன சோதனை சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 890 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடந்த மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.13 லட்சத்து 88 ஆயிரத்து 750 கைப்பற்றப்பட்டது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 'ஜி-பே' பரிவர்த்தனைகள் ரூ.94 லட்சத்து 69 ஆயிரத்து 887 என மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 607 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் இரண்டு பேர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தமிழக சிறப்பு காவல்படை 11வது பட்டாலியனில் போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்சம் வசூலிக்கப்பட்ட புகாரில், அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மூன்று போலீசார் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறர்கள். இதேபோல் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், சமையல் அறை, ஆழ்துளை கிணறு அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான 'பில்' தொகையை வழங்க, 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை பிடிஓ(பொது)வை, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருந்தார்கள். கடந்த நான்கு நாட்கள் முன்பு சேலம் தாரமங்கலத்தில் மின் இணைப்பு தர லஞ்சம் வாங்கிய 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் பகிர்மான உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இப்படி கடந்த சில வாரங்களில் மட்டுமே பலர் கைதாகி உள்ளனர்.