யூடர்ன் போடும் 25 எம்எல்ஏக்கள்? எடப்பாடி கிட்ட வர்றாங்களா? பதவி இழக்க போறாங்களா? விஜய் அரசுக்கு செக்

  • சென்னை: அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து விஜய் அரசுக்கு ஆதரவளிக்கும் 25 எம்எல்ஏக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.. இவர்களைத் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்ட ரீதியான காய்களை நகர்த்தி வருவதால், ஆளும் வர்க்கத்திற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. தற்போதைய அரசியல் சூழலில், ஆட்சியின் ஸ்திரத்தன்மை என்னவாகப் போகிறது? 25 பேரும் எடப்பாடி பக்கமே வரப்போகிறார்களா? அல்லது பதவி நீக்கம் என்ற அஸ்திரத்தை எதிர்கொள்ள போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு கோட்டையில் பரபரப்பை உருவாக்கியுள்ளது..!!

    Advertisement

    இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்ற விழாவில் மொத்தம் 21 பேர், அதாவது 19 தவெகவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

    Advertisement

    விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருப்பது எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக அதிருப்திக் குழுவை சேர்ப்பது கொள்கை ரீதியான நஷ்டத்தை அதிகரிக்கும் என்பதால் தவெக தலைமை அதிலிருந்து விலகியிருக்கிறது, என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

    அப்படியானால் 25 அதிமுக எம்எல்ஏக்கள் இனி என்ன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தவாறே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், மூத்த பத்திரிகையாளர்கள் தந்துள்ள பேட்டிகள், மிகுந்த கவனம் பெற்றுள்ளது..

    அதிமுக 25 எம்எல்ஏக்கள் பிளான்

    பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டியில் சொல்லும்போது, "தமிழகத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 10 நாட்கள் கடந்தும், அமைச்சரவை முழுமை பெறாமல் இருப்பது அரசின் ஸ்திரத்தன்மை மீது கடுமையான சந்தேகங்களை எழுப்பியதை மறுக்க முடியாது.. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும், அதில் உள்ள சிக்கல்கள் மிகவும் சிக்கலானவை.

    Advertisement

    குறிப்பாக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த 25 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனாலும் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகளின்படி, ஒரு கட்சியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விலகி, ஆளும் கட்சியுடன் முறையாக இணையாமல் தனி குழுவாகச் செயல்படுவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும். இத்தகைய சூழலில், அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநருக்குப் பெரிய தயக்கம் இருக்கலாம்.

    நீண்ட கால ஆதரவு இல்லை

    ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்ய மறுக்கும் பட்சத்தில், முதலமைச்சர் விஜய்க்கு சட்ட ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடும். இந்த 25 எம்எல்ஏக்களும் அமைச்சரவையில் இடம்பெறாவிட்டால், அவர்கள் நீண்ட காலத்திற்கு அரசுக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.

    Advertisement

    கொள்கை ரீதியான ஆதரவு என்பதைத் தாண்டி, அமைச்சர் பதவிக்காகவே இந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இவர்களை அரசுக்கு உள்ளேயே தக்கவைத்துக் கொள்வதுதான் விஜய்க்கு இருக்கும் ஒரே வழி.

    ஒருவேளை இவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை என்றால், இவர்கள் உள்ளாட்சித் தேர்தல் போன்ற காலங்களில் திமுக கூட்டணியை ஆதரிப்பதா அல்லது விஜயகாந்தை ஆதரிப்பதா என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இது அரசின் ஸ்திரத்தன்மையைப் பெரிய அளவில் பாதிக்கும்.

    25 எம்எல்ஏக்கள் பதவி

    தேர்தல் ஆணையம் அல்லது சபாநாயகர் மூலம் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அரசின் பலம் மேலும் குறைந்துவிடும். இத்தகைய நெருக்கடியான சூழலில், இவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் சந்திப்பது மட்டுமே சட்டச் சிக்கல்களை தவிர்க்கும் வழியாக இருக்க முடியும்.. ஆனால் அப்படி தேர்தல் நடந்தால் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்பதால், இது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகவே அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதேபோல துக்ளக் ரமேஷ் ஒரு பேட்டியில், 25 எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறத் துடிப்பது, அக்கட்சியின் தற்போதைய அதிகார போட்டியையே பிரதிபலிப்பதாக உள்ளது.. ஆனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால், இவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது விஜய்க்குப் பெரிய சட்ட ரீதியான சிக்கலாகவும், தார்மீக ரீதியாக மாற்று அரசியல் என்ற அவரது பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவாகவும் அமையும்..

    விஜய்க்கு ஒரே வழி

    இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் சந்தித்து வெற்றி பெற்று வர வேண்டும். இதைதான் விஜய் யோசனையாக தெரிவிப்பதாக தெரிகிறது.

    Advertisement

    எனினும்அதிமுக அடையாளத்தை இழக்க விரும்பாத எம்எல்ஏக்கள் இதற்குச் சம்மதிக்க வாய்ப்பில்லை, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு என்ற பெயரில் கையெழுத்து சேகரிப்பு போன்ற செயல்பாடுகள் அனைத்தும் கடந்த கால கூவத்தூர் அரசியல் போன்றே குழப்பமான ஒன்றாகவே முடியும்.. இந்த எம்எல்ஏக்களின் விவகாரமும், கட்சிச் சின்னம் குறித்த சர்ச்சைகளும் விஜய் நிர்வாகத்திற்குத் தொடர் தலைவலியை ஏற்படுத்தி, ஆட்சியின் ஸ்திரத்தன்மையைச் சோதிக்கும்" என்று துக்ளக் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

    யூடர்ன் போடும் 25 எம்எல்ஏக்கள்?

    தமிழக அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை என்பது உறுதியான நிலையில், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியால் விஜய் அரசுக்கு ஆதரவாகத் தாவிய அந்த 25 எம்எல்ஏக்களும் மீண்டும் தங்கள் பழைய கூடாரத்திற்கே திரும்புவார்களா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது..

    கட்சி கொறடாவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள இவர்கள், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற கனவில் இருந்த நிலையில், தற்போதைய சூழல் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமியின் கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் அதிருப்தி அலையைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் இந்த எம்எல்ஏக்களைத் தன்பக்கம் தக்கவைத்துக் கொள்ள விஜய் தரப்பு ரகசியமாக வலை விரித்து வருவதால், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தங்கள் பதவி பறிபோகும் என்பதால், அரசியலில் பிழைக்க எடப்பாடியிடம் சரணடைவதா அல்லது விஜய் பக்கம் முழுமையாகச் சாய்வதா என்ற குழப்பத்தில் 25 பேரும் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன...!!

    English Summary

    Will Vijay's Government Face Collapse? Edappadi Palaniswami's Super sketch to Disqualify 25 MLAs