சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், அன்றைய சம்பவத்தை நேரில் அனுபவித்த முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த நாளின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில் கூறியுள்ளதாவது: 25 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம் என்றாலும் அந்த நாளில் கற்றுக்கொண்ட பாடங்கள் என்றும் மறக்க முடியாதவை. இந்த சம்பவம் எனக்கு கற்றுக்கொடுத்த முக்கியமான வாழ்க்கைப் பாடம், எதுவும் நிரந்தரமானது அல்ல. மிகவும் வலிமையான கட்டிடங்களாக இருந்தாலும், மிகப்பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் அவை நிரந்தரமானவை அல்ல. உயிரிழப்பைத் தவிர வேறு எந்தவொரு இழப்பும் ஈடுசெய்ய முடியாதது அல்ல என்பது தான்.
25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலகத்தின் மீது ஒரு புதிய சகாப்தம் திணிக்கப்பட்டது. அதுவரை யாரும் கற்பனை செய்யாத சம்பவங்களும், சூழல்களும் அன்றைய தினம் நிகழ்ந்தது. அதன் பின்னர் பயணம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்த நடைமுறைகளும் விதிமுறைகளும் நிரந்தரமாக மாறின. 9/11 என்ற எண்களே உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான புதிய கட்டமைப்பின் அடையாளமாக மாறிவிட்டது. அன்றைய தினம் மிகவும் தெளிவான, பிரகாசமான காலை நேரமாக இருந்தது. இரட்டை கோபுரத்தின் மீது முதல் விமானம் மோதிய நேரத்தில் உலக வர்த்தக மையத்தில் (World trade center) தான் நான் இருந்தேன். 8.25 மணிக்கு செல்ல வேண்டிய வாட்டர் டாக்ஸியை தவறவிட்டதால், எக்ஸ்சேஞ் ப்லேஸ் பாத் ரயில் நிலையத்தை நோக்கி அவசரமாகச் சென்றேன். பின்னர், World Trade Center-க்கு செல்லும் PATH ரயிலில் பயணித்தேன். வேர்ல்டு டிரேட் சென்டரின் அடித்தளத்தில் ரயிலில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது தான் முதல் விமானம் வடக்கு டவர் மீது மோதியது. அதன் பிறகு ஏற்பட்ட குழப்பம், பதற்றம் மற்றும் சோகமான சம்பவங்கள் 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் எனது நினைவில் அப்படியே இருக்கிறது. தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே செல்போன் நெட்வொர்க்குகள் செயலிழந்தன அல்லது துண்டிக்கப்ப்பட்டன. இதனால் வீட்டுக்குச் செல்ல சில மைல்கள் நடந்து சென்றேன். பின்னர், மதியம் சுமார் 2 மணியளவில் தொலைபேசி மூலம் தனது பெற்றோரைத் தொடர்புகொண்டு நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று தெரிவித்தேன். வேர்ல்டு டிரேடு சென்டரின் நார்த் டவர் இடிந்து விழுந்தபோது, நான் பணியாற்றிய அலுவலகக் கட்டடமும் அழிந்தது. இதனால், அடுத்த சில மாதங்களுக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், டைம் ஸ்கொயர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகம், டிரேடிங் ஃப்ளோரில் பல ஆண்டுகள் பணியாற்றினேன். அதன் பிறகு மும்பைக்கு இடம்பெயர்ந்தேன். தாக்குதல் நடைபெற்ற பகுதி பல மாதங்கள் புகைந்து கொண்டிருந்தது. என் வீட்டின் பால்கனியில் இருந்த திரைகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் கருமையான தூசி கலந்த தண்ணீர் அதிகளவில் தேங்கியிருந்தது. என்னுடைய 9/11 அனுபவத்தை பல சந்தர்ப்பங்களில் பகிர்ந்துள்ளளேன். ஒவ்வொரு முறையும் என்னால் நினைவுகூர முடிந்த அளவுக்கு அந்த சம்பவங்களை கூறியுள்ளேன். ஆனால், காலப்போக்கில் சில நினைவுகள் மறைந்து விடக்கூடும் என்பதால், இந்த ஆண்டாவது எனது 9/11 அனுபவத்தை முழுமையாக எழுதி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 25 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால், அந்த நாளில் கற்றுக்கொண்ட அழியாத பாடங்கள் என்றும் நிலைத்திருக்கும். எதுவும் நிரந்தரமானது அல்ல. மிகவும் வலிமையான கட்டிடங்களாக இருந்தாலும், மிகப்பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் அவை நிரந்தரமானவை அல்ல. உயிரிழப்பைத் தவிர வேறு எந்த இழப்பும் ஈடுசெய்ய முடியாதது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், 2005 செப்டம்பர் 11-ம் தேதி தனது வீட்டின் பால்கனியில் இருந்து Nikon D70 கேமரா மூலம் எடுத்த 9/11 மெமோாரியல் லைட்ஸ் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.தவறவிட்ட வாட்டர் டாக்ஸி
முதல் விமானம் மோதியபோது..
எனது அனுபவம்