சென்னை: தஞ்சாவூரை சேர்ந்த 28 வயதான இளம் பெண், மணிப்பூர் மாநிலத்தின் இளம் வயது கலெக்டராக பொறுப்பேற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனிட்டா பதவி ஏற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழ் வழியிலேயே படித்து ஏஞ்சலின் தற்போது மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. 1998ல் பிறந்த அவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழி கல்வியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.
பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்ணும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்கள் எடுத்தார். பிறகு படிப்பில் சிறந்து விளங்கிய அவர், அந்தப் பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து UPSC தேர்வு 2021-ஐ எதிர்கொண்ட அவர், அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் பணிக்கு தேர்வானார். 2022-ம் ஆண்டு மணிப்பூர் கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மணிப்பூரில் பணியைத் தொடங்கிய பின்னர் Lamphel SDO, உள்துறை இணைச் செயலாளர் மற்றும் Manipur AIDS Control Society-யின் Project Director உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார். இந்த நிலையில், கடந்த மே 29-ம் தேதி கக்சிங் மாவட்டத்தின் Deputy Commissioner ஆக ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்றார். ஏஞ்சலின் ரெனிட்டாவின் சுறுசுறுப்பான துடிப்பான பணியை கண்ட அந்த மாநில அரசு தற்போது பதவி உயர்வு கொடுத்துள்ளது. தற்போது அவர் மணிப்பூர் மாநிலத்தின் இளம் ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தஞ்சாவூரில் பிறந்த ஏஞ்சலின் ரெனிட்டா தன்னுடைய கடினமான உழைப்பாலும், விடா முயற்சியாலும், சிறந்த படிப்பினாலும் உயர்ந்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் (CEG) Agricultural and Irrigation Engineering பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார்.