Neet: நீட் தேர்வில் வென்ற நெசவாளரின் மகன்கள்! 3 சகோதரர்களுக்கும் மருத்துவ சீட்! கைகொடுத்த 7.5%

  • சென்னை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூன்று பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் மூவரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளரின் மகன்கள் ஆவர்.

    Advertisement

    நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியைச் சேர்நதவர் ராம்குமார் (49). இவர் நெசவாளர். இவரது மனைவி மங்கையர்திலகம், இவர்களுக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    Advertisement

    நெசவுத் தொழில் செய்து வரும் ராம்குமார், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் 3 மகன்களையும் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.

    நெசவுத் தொழில் எத்தனை நலிந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனினும் அந்த வருமானத்தில் 3 மகன்களையும் படிக்க வைத்தார்.

    மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்தார். அவர் அப்போது நடந்த நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி 420 மதிப்பெண்களை பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டும் மீண்டும் தேர்வெழுதிய அவர் 440 மதிப்பெண்களை பெற்றார்.

    Advertisement

    அது போல் வெங்கட் ஸ்ரீயின் இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோர் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி முறையே 511, 494 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

    இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடந்த மருத்துவ கலந்தாய்வில் 3 பேருக்கும் இடம் கிடைத்துவிட்டது. வெங்கட்ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில இடம் கிடைத்தது.

    3 சகோதரர்களும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வென்று மருத்துவக் கல்லூரிகளில் படிக்கவிருப்பது அவர்களது வெள்ளங்குளி பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    Advertisement

    இதே போல் கடந்த 2020 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் ரேவதி, தேவகி ஆகிய இரட்டை சகோதரிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, தனலட்சுமி ஆகிய இரட்டை சகோதரிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நீட் மூலம் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்தது.

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள்கள் சுபாஷினி, சுபாஸ்ரீ ஆகிய இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். அது போல் சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் பயின்ற ராகவன், மாதவன் ஆகிய இரட்டை சகோதரர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளியின் மகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அது போல் நிறைய ஏழை மாணவர்கள் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் வழியாக தங்களது மருத்துவ கனவை நனவாக்கிக் கொள்கிறார்கள்.

    English Summary

    3 brothers from same family at Tirunelveli achieves Medical seat through Neet Exam under 7.5 percent reservation.