3 செகண்ட் லைவ் லேட் எதுக்கு தெரியுமா?.. லொள்ளு சபாவாக மாறிய பேரவை: போட்டுத் தாக்கிய கோடீஸ்வரன்

  • சென்னை: உதயநிதி ஸ்டாலினின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் "தேவைப்படும்போது நிரப்புவோம்" என மழுப்புவதும், எதிர்க்கட்சிகளுக்கு சரியான நேரம் ஒதுக்காமல் அவையின் நேரத்தை முடக்குவதும் ஜனநாயகத்திற்கு எதிரானது... தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை மறந்துவிட்டு இன்னும் பிரச்சார "மோடி"லேயே தவெக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பதிலுரை நாகரிகத்தின் எல்லையைக் கடந்து உருவக் கேலி, மற்றும் தனிமனிதத் தாக்குதலாக மாறியுள்ளது.. இது அசிங்கமாகவும், அருவெறுப்பாகவும் உள்ளது..

    Advertisement

    மக்களுக்கான விவாதங்கள் நடைபெற வேண்டிய சட்டசபையை "லொல்லு சபா" பாணியில் மாற்றி, மற்றவர்களைக் கேலி செய்வதை ஏற்க முடியாது.. இதெல்லாம் வீட்டிலிருந்தே ரிகர்சல் பார்த்து கிண்டல் செய்வது.. தோற்றவர்களையும் மறைந்த தலைவர்களையும் கொச்சைப்படுத்துவது அல்பத்தனமானது..

    உதயநிதி ஸ்டாலின்

    அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களிலும் பேரவையில், எத்தனையோ சண்டைகளும் கூச்சல்களும் நடந்துள்ளன.. ஆனால், அல்பத்தனமான முறையில் மற்றவர்களை கிண்டல் செய்து, மட்டமாக நடத்துவதும் மரியாதை குறைவாக நடப்பதும் இப்போது புதிய கலாச்சாரமாக உள்ளது..

    கட்சியின் உயர்மட்ட ஆலோசனைகளில் நேர்மையான முன்னாள் அதிகாரிகளையோ ஓய்வுபெற்ற நீதிபதிகளையோ சேர்க்காமல், மணல் வழக்கு, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களையும் முறைகேடான தொழில் செய்பவர்களையும் தவெகவில் சேர்த்திருக்கிறார்கள்.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பு ஏழைகளைப் போலக் காட்டிக்கொண்ட வேட்பாளர்களில் 90% பேர் சொகுசுக் கார்களை வைத்திருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. சினிமா பிம்பங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்வது ஆபத்தானது... சினிமாவில் வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா, நம்பியார் போன்றவர்கள் நிஜத்தில் மனிதநேய மிக்க ஹீரோக்களாகத் திகழ்ந்தனர், ஆனால் படத்தில் நல்லவராக நடித்த ஒரே காரணத்திற்காக ஒருவரை அரசியலில் அப்படியே ஏற்றுக்கொள்வது தவறு..

    பிரச்சார மோடில் தவெக

    மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் மிசா, சர்க்காரியா கமிஷன், அவசரநிலைக் காலம் என 50 வருடப் பழைய வரலாறுகளைப் பேசி நேரத்தை கடத்தினார்கள்.. ஆளுங்கட்சியின் ஆட்சி அனுபவமின்மை மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு பல விஷயங்கள் மடைமாற்றம் செய்யப்படுகின்றன.

    Advertisement

    கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் "தேவைப்படும்போது நிரப்புவோம்" என மழுப்புவதும், எதிர்க்கட்சிகளுக்குச் சரியான நேரம் ஒதுக்காமல் அவையின் நேரத்தை முடக்குவதும் ஜனநாயகத்திற்கு எதிரானது. கேமரா கட்டுப்பாடுகளும் 3 முதல் 5 விநாடி நேரலை தாமதமும் எதிர்க்கட்சிகளின் குரலை மக்களுக்கு செல்லவிடாமல் மறைக்கப் பயன்படுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை மறந்துவிட்டு இன்னும் பிரச்சார "மோடி"லேயே தவெக உள்ளது.

    யார் கஞ்சன்? யார் வள்ளல்?

    எம்ஜிஆர் விஜயகாந்த் போன்ற தலைவர்கள் தாராள மனதுடன் ஏழை எளியவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாரிக் கொடுத்த வள்ளல்கள். ஆனால், இன்றைக்கு எதையும் வழங்காமல் தங்களை வள்ளல்களாகக் காட்டிக்கொள்வது கஞ்சத்தனத்தை மறைக்கும் ஏமாற்று வேலை.

    Advertisement

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளுக்காகக் கேள்விகள் எழுப்பி நீண்ட போராட்டங்கள் மற்றும் தர்ணாக்களில் ஈடுபட்டாலும், அவையில் விரிவாகப் பதில் அளிப்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் மீதான விமர்சனமாக, எதிர்க்கட்சியினரோ அல்லது பிற புதிய உறுப்பினர்களோ மக்கள் சார்ந்த நிதர்சனமான பிரச்சினைகளைப் பேச முன்வரும்போது, அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டு, சட்டமன்ற காவலர்களைக் கொண்டு குண்டுக்கட்டாக வெளியேற்றப்படும் போக்கே நிலவுகிறது.

    கிரியேட்டிவ் ஐடியா தேவை

    இப்படி சட்டமன்றத்திற்குள் மன்றாடுவது நேர விரயம் என்பதால், எதிர்க்கட்சிகள் அவையை மட்டுமே நம்பியிருக்காமல் நேரடியாக மக்கள் மன்றத்திற்கு சென்று பிரச்சாரப் பாணியில் உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும்..

    Advertisement

    குறிப்பாக குதிரைப் பேரப் போராட்டம், தெருமுனைச் நாடகங்கள் போன்ற கிரியேட்டிவான வழிகளில் மக்களிடம் நேரடியாகச் சென்று உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.. ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை கிண்டல் செய்வது இன்னும் பல புதுமையான வழிகளில் மக்களுக்கு உண்மை நிலையைக் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    "உதயநிதியின் அந்த ரியாக்ஷன்! உண்மையான மாஸ் அது தான்" என்ற கேப்ஷனுடன், கோடீஸ்வரனின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. திமுகவினரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்..!!

    English Summary

    Udhayanidhi Stalin Reaction.. TVK Still in Campaign Mode.. Kodieswaran Exposes the Big Problem Facing Vijay's Party