சென்னை: கர்நாடகா மாநிலத்தில் 3 தமிழர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதாகவும் 3 பேரின் விலா எலும்புகளும் முறிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டதா என்பதையும் கேட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் காலை 9.30 மணிக்கு கூடியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே இந்த அவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் அந்த 3 தமிழர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அந்த 3 பேரும் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் விலா எலும்புகள் முறிக்கப்பட்டிருந்தன. 3 பேரும் அருகே நிற்க வைத்து திட்டமிட்டே கொல்லப்பட்டனர் என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கர்நாடகா அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டதா? அண்மையில் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் இது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டத்திற்குட்பட்ட காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சாக்யா பகுதி வன அலுவலகத்தைச் சேர்ந்த வனக்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்தப் பகுதியில் உள்ள டோமரா பாளையம், மரியமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த அந்தோணிசாமி (50) , ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (36) கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் வந்ததாகவும், அவர்களை வனத்துறையினர் தடுக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில் தற்காப்புக்காக அவர்களை சுட்டதாகவும் வனத்துறை தெரிவித்திருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.