யாருகிட்டயாவது சொன்னா குடும்பத்தோட காலி! 35 கோடி பேரம்.. எப்ஐஆரில் பகீர் தகவல்! எஸ்கேப்பான செ.பா.!

  • சென்னை: தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படும்படி வலியுறுத்தியதுடன், மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என கொலை மிரட்டலும் விடுத்துள்ள பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    இந்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸார் இதுவரை 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமறைவாகியுள்ளார்.

    Advertisement

    ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரான இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் அடிப்படையில்தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் இடம்பெற்றுள்ள தகவல்களே தற்போது எப்ஐஆராக வெளியாகியுள்ளன.

    இளையராஜா எம்எல்ஏ

    எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பதன்படி, திருநாவுக்கரசு என்பவர் முதலில் தொலைபேசியில் இளையராஜாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, சென்னை நகரில் "ஐபிடிஎஸ்" (IPDS) என்ற பெயரில் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு, "ஒரு முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் உங்களை தொடர்பு கொள்கிறேன். உங்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் நேரடியாக பேசுகிறேன்" என்று கூறியதாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    35 கோடி பேரம்

    இதற்குப் பிறகுதான் முக்கியமான பேரம் பேசப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த நேரத்தில் தாங்கள் கூறுவது போல செயல்பட்டால் ரூ.35 கோடி வழங்கப்படும் என்றும் திருநாவுக்கரசு கூறியதாக இளையராஜா தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பேரத்தை ஏற்க இளையராஜா மறுத்ததாகவும், "எனக்கு இதில் விருப்பம் இல்லை. இனிமேல் என்னிடம் இதுபோன்று பேச வேண்டாம்" என்று தெளிவாக கூறியதாகவும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திருநாவுக்கரசு

    இதோடு அந்த உரையாடல் முடிவடையவில்லை என்றும், அதன்பிறகு மீண்டும் திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு பண ஆசையை காட்டி சம்மதிக்க வைக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது. "நீங்கள் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ரூ.35 கோடி என்பது நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத தொகை. நாங்கள் சொல்வது போல நடந்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது. இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று கூறியதாக புகாரில் இடம்பெற்றுள்ளது.

    Advertisement

    கொலை மிரட்டல்

    அதுமட்டுமல்லாமல், "நான் பேசியது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது. வெளியில் சொன்னால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள்" என்று மிரட்டியதாகவும் இளையராஜா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை போலீஸ்

    விசாரணை தொடர்ந்து நடந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கார்த்திக் மற்றும் மேலும் ஒருவரையும் சென்னை போலீஸார் கரூரில் கைது செய்தனர். இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரை வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    Advertisement

    எப்ஐஆர்

    முதல் தகவல் அறிக்கையின்படி, திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டுச்சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் வேறு அரசியல் பிரமுகர்கள் அல்லது இடைத்தரகர்கள் யாரேனும் உள்ளனரா, ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் பின்னணி என்ன, யார் சார்பில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    செந்தில் பாலாஜி

    இந்த வழக்கு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ள நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் விசாரணையில் வெளியாகும் தகவல்கள் மூலம் அடுத்தடுத்து சில முக்கிய புள்ளிகள் சிக்கலாம் எனவும், இது தமிழக அரசியலில் நிச்சயம் புயலைக் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாரிடம் விசாரணை நடத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

    English Summary

    FIR in the alleged ₹35 crore bribery case reveals death threats, conspiracy claims, and intensifying police investigation.