ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம்

  • சென்னை: தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கும்மிடிப்பூண்டியில் 3 வயது பிஞ்சு குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், அடுத்தடுத்து 11 சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வுகளும் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு 6 நாட்களில் இப்படியொரு அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பலத்த பாதுகாப்பு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே 10ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள்..

    Advertisement

    இதற்கு வலுசேர்க்கும் விதமாக, தினம் தினம் மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் பாலியல் அத்துமீறல்களும், கொடூரக் குற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்து வருகிறது.

    கும்மிடிப்பூண்டி சிறுமி

    கும்மிடிப்பூண்டி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த ஒரு கொடூரம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையுமே கேள்விக்குறியாக்கியுள்ளது. வெறும் 3 வயதே ஆன ஒரு பிஞ்சுப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

    இந்த தகவல் கேள்விப்பட்டதுமே. ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களைச சமாதானப்படுத்த வேண்டிய போலீசாரோ, குண்டுக்கட்டாகக் கைது செய்து அப்புறப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை வலுவாக தெரிவித்து வருகிறார்கள்.

    Advertisement

    10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

    இந்த கொடூரத்தின் வடு மாறுவதற்குள், அடுத்தடுத்து 10 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

    திருவள்ளூர் அருகே, 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் நந்தகுமார் என்ற ஆட்டோ டிரைவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பயந்துபோன அந்த மாணவி அம்மாவிடம் சொல்ல, அவர் உடனடியாக முதலமைச்சரின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதிரடிப்படையினர் விரைந்து வந்து அந்த ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் திருப்பூரிலும் அடுத்தடுத்து 2 அட்டகாசங்கள் நடந்துள்ளன. 7 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது இளைஞன் சத்தியசீலன் என்பவனும், 11 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய வெள்ளியங்கிரி என்ற 66 வயது முதியவரும் போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கோயம்பேடு பெண்ணுக்கு வந்த நிலைமை

    முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி 6 நாட்களே ஆன நிலையில், ஒரு பாலியல் குற்றத்தைக் கூடத் தடுக்க முடியாமல், அடுத்தடுத்து 11 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளது பெண்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    சிறுமிகள் மட்டுமல்லாமல், வளர்ந்த பெண்களுக்கும் இங்குப் பாதுகாப்பு இல்லை என்பதைப் பறைசாற்றும் விதமாக மேலும் மூன்று சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி, அங்குள்ள பேக்கேஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 23 வயது இளம்பெண் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

    Advertisement

    தூக்கத்தில் தன் மீது யாரோ படுத்திருப்பதை உணர்ந்து அந்தப் பெண் சத்தம் போடவே, அச்சமடைந்து தப்பியோடிய அந்த இளைஞரை இளம்பெண்ணின் சித்தப்பா, பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.

    சிங்கப்பெண் படை திட்டம்

    இதுகுறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த பிஜயதேவ்யா (26) என்பதும், அவர் கடந்த பல நாட்களாக அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து நோட்டமிட்டு இந்த அத்துமீறலில் ஈடுபட்டதும் உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.

    Advertisement

    அதேபோல், போரூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுத் தப்பிய கார்த்தி என்ற இளைஞரும், மாங்காடு பகுதியில் 23 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றிப் பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காவலாளி தனவேலும் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    அடுத்தடுத்து அரங்கேறும் இந்த பாலியல் வேட்டைகள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாகத்தான் வாழ்கிறார்களா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. வெறும் அதிரடிப்படை அறிவிப்புகள் மட்டும் போதாது, குற்றவாளிகளின் நெஞ்சில் மரண பயத்தை ஏற்படுத்தும் அளவிற்குக் கடுமையான தண்டனைகளும், உடனடி நடவடிக்கைகளும் எடுத்தால் மட்டுமே இந்த பாலியல் மிருகங்களை அடக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் குமுறலாக உள்ளது.

    English Summary

    Where is the Singappen Brigade Scheme! 11 Girls Affected in Tamil Nadu Over Safety Concerns Reported