ரூ.5,000 கோடி மோசடி வழக்கு.. பிரபல செய்தி சேனல் இயக்குநர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்கு

  • சென்னை: சாமானிய மக்கள் மற்றும் முதியவர்களின் சேமிப்புப் பணத்தை ஏமாற்றி சுமார் ₹5,000 கோடி வரை முறைகேடு செய்த வழக்கில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் தலைவர் ஆர். பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரபல தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரான பிரேம்குமார் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மக்களின் சேமிப்பில் சொகுசு வாழ்க்க

    பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் டெபாசிட் நிதி வசூலிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டங்களின் முதிர்வுக் காலம் முடிந்த பிறகும் பொதுமக்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராமல் அலைக்கழித்துள்ளனர்.

    Advertisement

    மக்களின் இந்த சேமிப்பை, முறைகேடாக தனது சொந்த கணக்குகளுக்கும் குடும்பத்தினர் பெயர்களுக்கும் பிரேம்குமார் மாற்றியுள்ளார் என்பது புலனாய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த நிதியைப் பயன்படுத்தி சென்னை, திருவனந்தபுரம், மூணார் மற்றும் பேக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆடம்பர சொகுசு விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் வீட்டு மனை நிலங்களை அவர் வாங்கி குவித்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

    அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை:

    ஏற்கெனவே கோழிக்கோடு குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அக்டோபர் 29 அன்று பிரேம்குமாரை சென்னையில் வைத்து கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பணத்தை சட்டவிரோதமாகப் பல நிறுவனங்களுக்குத் திருப்பி ஹவாலா மற்றும் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை தற்போது ECIR பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    Advertisement

    இதன் மூலம் பிரேம்குமார் மற்றும் அவரது BLM சங்கத்தின் பெயரில் பினாமியாக வாங்கப்பட்ட அனைத்து சொகுசு விடுதிகள், திரையரங்குகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கத் தயாராகி வருகிறது.

    20 ஆண்டுகளில் வளர்ந்த பிரம்மாண்ட வலைப்பின்னல்

    சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 2006-ல் தொடங்கப்பட்ட இந்த பாரத் லஜ்னா அமைப்பு, வீட்டு வசதி சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அடுத்த 20 ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் அசுர வேகத்தில் பரவியது. பேருந்து போக்குவரத்து, சிமெண்ட் ஆலைகள், தங்க நகை கடைகள், மருத்துவமனைகள், பயோ கேஸ் உற்பத்தி எனப் பல தொழில்களிலும் இந்த சங்கத்தின் நிதி திருப்பப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    Advertisement

    லஞ்சம் கொடுக்க முயற்சி

    வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க, திருவனந்தபுரத்திற்குச் சென்ற பிரேம்குமார் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தவறு செய்தவர்கள் மீது சமரசமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைப் பின்தொடர்ந்து வந்து சென்னையில் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது கேரள குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை ஒருபுறம் நடக்க, மறுபுறம் அமலாக்கத்துறையும் களத்தில் இறங்கியுள்ளதால், ₹5,000 கோடி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் மற்றும் பினாமிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    ₹5,000-Crore Fraud: ED Files Case Against BLM Chairman R Premkumar for Money Laundering