5 தொகுதி இடைத்தேர்தல் தேதி விரைவில்? டெல்லியிலிருந்து விஜய்க்கு வந்த தகவல்.. தவெகவின் மெகா வியூகம்

  • டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆளும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தனது பலத்தை உயர்த்தியிருந்தாலும், இந்த வெற்றி குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே அமைந்தது. 234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் ஆட்சிக்குத் தேவையான தனிப் பெரும்பான்மை இலக்கான 118 இடங்களை எட்ட, தவெகவுக்கு இன்னும் 9 எம்.எல்.ஏக்கள் குறைவாகவே உள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், டெல்லியிலிருந்து கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின்படி, மீதமுள்ள 5 தொகுதிகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மற்றும் தேர்தல் சிக்கல்கள் இந்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரவுள்ளன. அதைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக இடைத்தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழுப் பெரும்பான்மையை எட்ட முதல்வர் விஜய் நேரடியாகவே தீவிர களப் பிரச்சாரத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளார்.

    Advertisement

    தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை

    மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றது. திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் விட்டுவிட்டு பெரம்பூரைத் தக்க வைத்ததால் பலம் 107 ஆகக் குறைந்தது. பின்னர் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தவெகவின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்தது. ஆனால் 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட இன்னும் 9 இடங்கள் தேவைப்படுவதால், கூட்டணிக் கட்சிகளின் துணையுடனே அரசு செயல்பட்டு வருகிறது.

    சட்டசபையில் தற்போது மேலும் 5 தொகுதிகள் காலியாக உள்ளன:

    1. பெருந்துறை (எஸ். ஜெயக்குமார்)
    2. கரூர் (எம்.ஆர். விஜயபாஸ்கர்)
    3. திருச்சி கிழக்கு (முதல்வர் விஜய் ராஜினாமா செய்த தொகுதி)
    4. விராலிமலை (சி. விஜயபாஸ்கர்)
    5. அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா)

    Advertisement

    இந்த 5 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால்கூட அதன் எண்ணிக்கை 114 ஆக மட்டுமே உயரும்; அப்போதும் தனிப் பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாகவே இருக்கும்.

    புத்துணர்ச்சியில் திமுக - உஷாரான தவெக

    சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் தவெக வென்றாலும், திமுக இரண்டாம் இடத்தைப் பிடித்த விதம் அக்கட்சியின் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் தெம்பையும் கொடுத்துள்ளது. திமுகவின் இந்த எழுச்சியைக் கூர்ந்து கவனித்துள்ள முதல்வர் விஜய், இம்முறை வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அல்லாமல், வரலாற்றுச் சிறப்புமிக்க இமாலய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

    Advertisement

    இதன் பின்னணியில்தான், கடந்த திமுக ஆட்சிக் கால முன்னாள் அமைச்சர்கள் மீது சமீபகாலமாக எடுக்கப்பட்டு வரும் அதிரடி சட்ட நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 சிறப்பு நீதிமன்றங்கள்! முதல்வர் விஜய் உத்தரவு

    சூறாவளிப் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய்: நவம்பர் அட்டவணை

    தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், முதல்வர் விஜய் உடனே மக்கள் சந்திப்பைத் தொடங்குகிறார்:

    நவம்பர் 2: விராலிமலை தொகுதிக்குச் சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
    நவம்பர் 3: பெருந்துறை தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்கிறார்.
    நவம்பர் 14 (குழந்தைகள் தினம்): அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்கிறார்.

    Advertisement

    இந்த மூன்று தொகுதிகளிலும் பிரம்மாண்ட ரோடுஷோக்கள் (வாகனப் பேரணிகள்) மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டங்கள் தயாராகியுள்ளன. முதல்வரின் வருகைக்குப் பிறகு, அமைச்சர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையுமே இந்த 5 தொகுதிகளிலும் களமிறக்கப்பட்டு முழுவீச்சில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட உள்ளன.

    தமிழ்நாடு உருவான நாள்.. போராட்டங்களை கடந்து நிலைத்த பெயர்! முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து!

    பெருந்துறையில் காத்திருக்கும் சவால்

    இதில் பெருந்துறை தொகுதி தவெகவுக்கு மிகக் கடுமையான களமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்கள் வசிக்கின்றனர். ஆனால், தவெகவின் அடிப்படை வாக்கு வங்கியான பட்டியலின மக்கள் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் இங்கு குறைந்த அளவிலேயே உள்ளனர்.

    Advertisement

    கவுண்டர் சமூக வாக்குகளை அதிமுகவோ அல்லது திமுகவோ பெருமளவில் ஈர்த்தால், தவெகவின் வெற்றி கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. அரசு உளவுத்துறை அனுப்பிய ரகசிய அறிக்கையிலும், "பெருந்துறையில் கள நிலவரம் தவெகவுக்கு மிகவும் கடினமாக உள்ளது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்த பலவீனங்களை உடைத்து, கொங்கு மண்டலத்திலும் தென் மாவட்டங்களிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர முதல்வர் விஜய் வகுத்துள்ள இந்த 'மெகா வியூகம்' எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதைத் தேர்தல் களம் தீர்மானிக்கும்.

    English Summary

    5 TN Assembly Bypolls: CM Vijay's Mega Campaign Plan to Secure TVK Majority