அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல்

  • சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதையும், அரசுப் பேருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டால் அரசுக்கு ரூ.53 நட்டம் ஏற்படுவதையும் நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சுட்டிகாட்டி உள்ளார்.

    Advertisement

    முதல்வர் விஜய் பொறுப்பேற்றதுமே தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற வாக்குறுதியின்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இந்த விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், போக்குவரத்துத் துறையின் இமாலய நஷ்டம் மற்றும் உள்கட்டமைப்புச் சீரழிவு மிக முக்கியப் புள்ளியாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசுப் பேருந்துகளில் நீண்டகாலமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, போக்குவரத்துத் துறையை நோக்கி வரவிருக்கும் பெரிய மாற்றங்கள் அல்லது 'தனியார்மயமாக்கல்' (Privatisation) நடவடிக்கைக்கான வலுவான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.

    1 கி.மீ-க்கு ரூ.53 நட்டம்: கைகொடுக்காத வருவாய், இரட்டிப்பான செலவு!

    வெள்ளை அறிக்கையின்படி, தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்களின் ஒட்டுமொத்த கடனளவு தற்போது ரூ.61,642 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையின் செலவுகள் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளன; ஆனால், அதற்கேற்ப வருவாயைப் பெருக்குவதற்கான எவ்வித ஆக்கப்பூர்வமான உத்திகளும் கையாளப்படவில்லை என நிதியமைச்சர் மரிய வில்சன் கடுமையாகச் சாடியுள்ளார்.

    Advertisement

    குறிப்பாக, "பேருந்து ஒரு கிலோமீட்டர் ஓடினால் ரூ.53 நட்டம் ஆகிறது" என்ற அதிர்ச்சித் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் பன்மடங்கு உயர்ந்தபோதும், அதற்கேற்ப கட்டணங்கள் சீரமைக்கப்படாததே இந்த இமாலயப் பற்றாக்குறைக்குக் காரணம் என மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    டிக்கெட் கட்டண உயர்வு இல்லாமை: தனியார்மயமாக்கலுக்கு அச்சாரமா?

    அரசுப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தாலும், அது போக்குவரத்து கழகங்களை முற்றிலும் முடக்கிப் போட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

    Advertisement

    அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்களின் கணிப்புப்படி, இந்த அறிக்கை வெறும் புள்ளிவிவரக் கணக்கு மட்டுமல்ல; நஷ்டத்தில் இயங்கும் குறிப்பிட்ட வழித்தடங்களை ஒழுங்குபடுத்துவது அல்லது ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் படிப்படியாக தனியார்மயமாக்குவதற்கு (Privatisation) அரசுத் தரப்பில் போடப்படும் அச்சாரம் இதுவாக இருக்கலாம். "அரசே இவ்வளவு நஷ்டத்தைச் சுமக்க முடியாது" என்ற வாதத்தை மக்கள் மத்தியில் முன்வைத்து, தனியார் பங்களிப்பை உள்ளே கொண்டு வர புதிய அரசு திட்டமிடுவதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

    மாநிலத்தின் சொந்த வரி வருவாயும் வீழ்ச்சி!

    போக்குவரத்துத் துறை மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயும் (SOTR) முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது என நிதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த 2021-2026 இடைப்பட்ட ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், வருவாய்ப் பற்றாக்குறை பேரிடர் காலமான கொரோனா காலகட்டத்தை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.78,324 கோடியை எட்டியுள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு தமிழர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை!

    மாநிலத்தின் ஒட்டுமொத்த வரவு செலவுக் கணக்குகள் தாறுமாறாகச் சீர்குலைந்துள்ளதால், தமிழ்நாட்டின் நேரடிக் கடன் சுமை இமாலயப் பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் (GSDP) கடனின் அளவு 28.3 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிக அதிகம் என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது.

    நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்றால், தமிழக அரசு வாங்கும் கடன்களில் 3-ல் ஒரு ரூபாய், வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்தவே செலவாகிறது.

    Advertisement

    புதிய அரசின் அடுத்த கட்ட அதிரடி என்ன?

    கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ள நிதியமைச்சர் மரிய வில்சன், "முந்தைய ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடனில் மூழ்கியுள்ளன. இங்கிருந்து நிதி நிலையைச் சீரமைப்பது பெரும் சவால் என்றாலும், சொந்த வரி வருவாயைப் பெருக்கவும், தேவையற்ற நிதி விரயங்களைத் தடுக்கவும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடுமையான, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்துத் துறையின் நஷ்டத்தை முன்வைத்து வெளியாகியுள்ள இந்த வெள்ளை அறிக்கை, தமிழகத்தில் விரைவில் பேருந்துக் கட்டண உயர்வு அல்லது தனியார்மயமாக்கல் போன்ற அதிரடிப் பொருளாதார மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற விவாதம் தற்போதே அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.

    English Summary

    ₹53 Loss Per KM, ₹61,642 Cr Debt: TN White Paper Exposes Transport Financial Crisis; Signals Possible Privatization Moves