சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெறுவதற்காக திமுக நிர்வாகி அரசகுமாரிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்துள்ளதாக இதுவரை 59 பள்ளிகள் புகார் கொடுத்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசகுமார் என்கிற திமுக நிர்வாகி ஒருவர் தனியார் பள்ளி சங்கம் ஒன்றை பெயரளவிற்கு நடத்தி வந்தார். தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவது, புதுப்பித்தல் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்துள்ளார்.
இதற்காக தனியார் பள்ளிகளிடம் இருந்து ஒரு தொகையை லஞ்சமாகப் பெற்று வந்துள்ளார். ஆனால், லஞ்சம் கொடுத்த பலருக்கும் தான் கூறிய வேலையை செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தவெக ஆட்சிக்கு வந்தவுடன் அரசகுமாரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகத்தினர் புகார் அளிக்கத் தொடங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக 59 தனியார் பள்ளிகள் புகார் அழித்துள்ளனர். மோசடி தொடர்பாக பல கோடி மதிப்புள்ள 24 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 7.34 கோடிக்கு மோசடி புகார் வந்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் ஏமாந்த பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த லஞ்சப் பணத்தில் எங்கெல்லாம் சொத்துகள் குவிக்கப்பட்டுள்ளன என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.