“ஹைதராபாத் ஸ்பெஷல் ஷோ துயரம் தமிழகத்திலும் நடக்க விஜய் ஆசைப்படுகிறாரா?” - திமுக கடும் எதிர்ப்பு!

  • சென்னை: திரையரங்குகளில் 6 மணிக் காட்சிக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. "ஹைதாராபத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட துயரக் காட்சிகள் தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும் என விஜய் அரசு ஆசைப்படுகிறதா?" என திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிடலாம் என தவெக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    Advertisement

    பொதுமக்களின் பாதுகாப்பை பணயமாக வைத்து வழங்கப்பட்டுள்ள 6 மணிக் காட்சி அனுமதிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதாராபத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட துயரக் காட்சிகள் தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டும் என விஜய் அரசு ஆசைப்படுகிறதா? இளைஞர் சமுதாயத்தையும், தமிழ்நாடு கலாச்சாரத்தையும் சீரழிக்கும் நோக்கில் பொழுது விடிந்தவுடன் புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடலாம் என்று தவெக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு பேரதிர்ச்சியளிக்கிறது.

    Advertisement

    நான் முதல்வன், புதுப்புது நூலகங்கள், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்றெல்லாம் மாணவர்களின் அறிவுசார் தமிழ்நாட்டின் பக்கமாக அழைத்துச் செல்ல திராவிட மாடல் ஆட்சியில் வியத்தக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், தவெக ஆட்சியிலோ "பொழுது விடிந்ததும் சினிமா" "காலை 6 மணி முதல் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரையிடலாம்" என உத்தரவு அளித்து, ஒரு Generational Destruction யைச் செய்யத் தொடங்கி விட்டது!

    இதே முதலமைச்சர் விஜய்யின் லியோ பட ரீலீஸின் போதுதான் ஒரு திரையரங்கில் காலை 6 மணிக் காட்சியில் ஏற்பட்ட நெரிசல், கண்ணாடிகள் உடைப்பு, கலாட்டா என மக்கள் பதற்றத்தில் மூழ்கினார்கள். அப்படியொரு ஆபத்தை தவிர்த்திடவே திராவிட மாடல் ஆட்சியில் காலை 6 மணி காட்சிக்கு மட்டுமல்ல, ஒரு நாளைக்கு 6 காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    Advertisement

    அன்றைக்கு "7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு" லியோ படத் தரப்பினர் மாண்பமை உயர்நீதிமன்றத்திற்கு சென்ற போது கூட பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதையே உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆகவேதான் 6 மணி அல்லது 7 மணிக் காட்சியோ, ஒரு நாளைக்கு 6 காட்சிகளோ அனுமதிக்க முடியாது என்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருந்தது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் "6 மணி காட்சி மற்றும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள்" என புதிய திரைப்படங்களுக்கு உத்தரவிட்டுள்ளது மிகக் கொடுமையான கலாச்சாரத் தாக்குதல் மட்டுமல்ல, நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செயலும் கூட! அடுத்தடுத்துக் காட்சிகள் திரையிடப்படுவதால், மறு காட்சி தொடங்குவதற்கு இடைப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருக்கும். அதனால், தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்களும் உள்ளே நுழைபவர்களும் முட்டி மோதி அதனால் நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படலாம்.

    Advertisement

    ஹைதராபாத்தில் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நிகழ்வு. 2023-ல் ஒரு திரைப்பட ரிலீஸின் போது சென்னை திரையரங்கம் அருகே, நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சியைக் கொண்டாட வந்த ரசிகர் லாரியின் மீது ஏறி நடனமாடி கீழே விழுந்து உயிரிழந்தார். இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமாக இருந்தது.

    ஆனால் இப்போது விஜய் அரசு 6 காட்சிகள் அனுமதித்தித்து அதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை, பண்பாட்டை சீரழிக்கும் இப்படியொரு முன்னெடுப்பை- அதுவும் பொதுமக்களின் பாதுகாப்பை பணயமாக வைத்து விஜய் அரசு எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    Advertisement

    புதுப்படம் வெளியாகும் போது மற்ற மாநிலங்களில் காலை ஆறு மணிக்கு காட்சிகள் திரையிடுவதால் தமிழ்நாட்டில் முன்கூட்டியே திரை விமர்சனம் வெளியாகி, படத்தின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது என்கிற நோக்கத்தில் தமிழ்நாடு நடப்பு சினிமா தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருக்கிறது. மனித உயிர்களை விட எந்த வகையிலும் திரைப்படத்தின் வெற்றி உயர்ந்ததில்லை. ஹைதராபாத் துயர நிகழ்வுக்கு பிறகு மற்ற மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுக்கள் விதித்து வருகிறார்கள். திரைப்படத்தின் வெற்றியை விட அடுத்த தலைமுறை வாழ்க்கையின் வெற்றிதான் முக்கியம் என்பதை இந்த அரசு உணர வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

    English Summary

    DMK has expressed its opposition to the 6 AM film screenings in cinema theaters. Former DMK MLA Paranthamen has posed the question: "Does the Vijay-led government wish for the tragic incidents that occurred during a special show in Hyderabad to be repeated in Tamil Nadu as well?"