அதிமுகவில் 6 பேர், காங்கிரஸ் 2 பேர்.. தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம்? கவர்னர் இன்று சென்னை வருகை

  • சென்னை: கடந்த 10-ந் தேதி த.வெ.க.வின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அந்த 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ம் தேதி துறைகளை விஜய் ஒதுக்கினார். இன்னும் 20க்கும் மேற்பட்ட துறைகள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரஸ், அதிருப்தி அதிமுகவில் சிலர் என அமைச்சர்களாக ஆக உள்ளனர். புதிய அமைச்சர்களுடன் தமிழக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    2026 சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. தேர்தல் அன்று வரலாற்றில் இல்லாத நிகழ்வுகள் நடந்தது. அது தான் இளைஞர்கள் புரட்சி.. ஒட்டுமொத்த இளைஞர்களும் வழக்கத்திற்காக மாறாக சென்னை, பெங்களூர், கோவை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து மொத்த மொத்தமாக சொந்த ஊர சென்று, வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகமானது. சென்னையிலுமே நம்பவே முடியாத அளவிற்கு வாக்குசதவீதம் அதிகமாகவே இருந்தது. பொதுவாக அதிகமான வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு எதிராகவே முடியும் என்று நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கை உண்மை என்பது என்பது மே4-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது உறுதியானது.

    Advertisement

    இதில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறவில்லை. மற்ற கட்சிகளைவிட அதிக இடங்களை த.வெ.க. வென்றது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவுடன் விஜய், கடந்த 10-ந் தேதி தமிழ்நாட்டின் பதவி ஏற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. எனினும் வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 20 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை..

    Advertisement

    த.வெ.க.விற்கு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஐ.யு.எம்.எல். கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து பிளவபட்டு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வை ஆதரிக்கிறார்கள். ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில், சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 144 ஆக நம்பிக்கை வாக்கெடுப்பில் உயர்ந்து இருந்தது.

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய 2 பேர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களில் ஒருவருக்கு மீன்வளத்துறை ஒதுக்கப்பட உள்ளதாம். அதோடு, அ.தி.மு.க.வில் இருந்து பிளவபட்டு, த.வெ.க.வை ஆதரிக்கும் 25 எம்.எல்.ஏ.க்களில் சிலர் அமைச்சரவையில் இடம் பெற விரும்புகிறார்கள். எனவே எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர் உள்பட 6 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது

    Advertisement

    எனவே, காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு, தமிழக அமைச்சரவை விரிவுபடுத்தப்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை பொறுத்த அளவில் முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் இடம் பெறலாம். எனவே மீதமுள்ளவர்கள், த.வெ.க.வில் இருந்து தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இன்று சென்னைக்கு ஆளுநர் அர்லேகர் வருகிறார். அவர் நாளை (21-ந் தேதி) புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    English Summary

    6 from AIADMK, 2 from Congress: Will Vijay's Tamil Nadu Cabinet be expanded tomorrow? Governor arrives in Chennai today.