சென்னை: 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயரப் போவதாக வெளியாகி உள்ள தகவல் தற்சமயம் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய மாற்றத்தின்படி ஊழியர்களின் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை நிர்ணயிக்கும் பெருக்கல் விதி, பதவிகளின் தரத்திற்கு ஏற்ப பல பிரிவுகளாக மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி மட்டும் மாற்றிவிட்டால், பிரம்மாண்ட சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வேலைகள் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவதற்காக ஊதியக் குழு அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 1.1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக, கடந்த 2025ஆம் ஆண்டில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த குழு, இன்னும் 18 மாதங்களுக்குள், அதாவது அடுத்த 2027ஆம் ஆண்டு பாதியில் அரசிடம் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஊழியர்களுக்குப் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். இந்த நிலையில், ஊதியக் குழுவிடம் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றன. இதில் இந்திய இரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் கொடுத்துள்ள ஒரு பரிந்துரைதான் இப்போது ஒட்டுமொத்த மத்திய அரசு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொடுத்துள்ள பரிந்துரை மட்டும் ஏற்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் யாரும் எதிர்பாராத வகையில் பல மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது. பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு என்பது பிட்மென்ட் ஃபேக்டர் எனப்படும் ஒரு பெருக்கல் விதியின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. அதாவது இப்போதைய அடிப்படைச் சம்பளத்தை இந்த குறிப்பிட்ட எண்ணால் பெருக்கினால் புதிய சம்பளம் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இதற்கு முந்தைய 7-வது ஊதியக் குழுவில் இந்த பெருக்கல் எண் 2.57 ஆக இருந்தது. அதாவது, அனைத்து ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமும் 2.57 என்ற ஒரே எண்ணால் மட்டுமே பெருக்கப்பட்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் ஒரு புதிய அதிரடி யோசனையை முன்வைத்துள்ளது. "அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பெருக்கல் எண் வேண்டாம், அதற்குப் பதிலாக பதவிகளின் லெவலுக்கு ஏற்ப 5 பிரிவுகளாகப் பிரித்து சம்பளத்தை உயர்த்த வேண்டும்" என்று அவர்கள் கோரியுள்ளனர். ஆரம்பக்கட்ட பதவிகளில் இருக்கும் லெவல் 1 முதல் 5 வரையிலான ஊழியர்களுக்கு 2.92 என்ற பெருக்கல் எண்ணையும், நடுத்தர பதவிகளில் இருக்கும் லெவல் 6 முதல் 8 வரையிலான ஊழியர்களுக்கு 3.50 என்ற பெருக்கல் எண்ணையும் வழங்க பரிந்துரைத்துள்ளார்கள்.. அதேபோல உயர் பதவிகளில் இருக்கும் லெவல் 9 முதல் 12-க்கு 3.80, லெவல் 13 முதல் 16-க்கு 4.09 மற்றும் மிக உயரிய பதவிகளில் இருக்கும் லெவல் 17 முதல் 18 வரையிலான அதிகாரிகளுக்கு 4.38 என்ற பெருக்கல் எண்ணையும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த புதிய பரிந்துரையை ஒருவேளை 8-வது ஊதியக் குழு அப்படியே ஏற்றுக் கொண்டால், ஊழியர்களின் சம்பளக் கணக்கு தலைகீழாக மாறிவிடுமாம். உதாரணத்திற்கு லெவல் 6 முதல் 8-க்குள் வரும் ஒரு நடுத்தர ஊழியர் தற்போது 45 ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வாங்குகிறார் என்றால், புதிய பரிந்துரைப்படி அவருடைய சம்பளம் 3.50 என்ற எண்ணால் பெருக்கப்படும். அப்போது அவருடைய புதிய அடிப்படைச் சம்பளம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாயாக எகிறும். இதுவே லெவல் 18 பிரிவில் இருக்கும் ஒரு மிக உயர் அதிகாரி தற்போது 2.5 லட்சம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வாங்குகிறார் என்றால், அவருக்கு 4.38 என்ற பெருக்கல் எண் பயன்படுத்தப்படும். இதன் மூலம் அவருடைய சம்பளம் சுமார் 11 லட்சம் ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 4 மடங்குக்கு மேல் என்றால் 400% வரை உயர வாய்ப்புள்ளதாம் இது ஒருபுறமிருந்தாலும் JCM என்று சொல்லப்படும் நேஷனல் கவுன்சில் போன்ற மற்ற முக்கிய சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்பக்கட்ட அடிப்படைச் சம்பளமே 69 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றும், பாரதிய பிரதிக்ஷா மஸ்தூர் சங்கம் குறைந்தபட்ச சம்பளம் 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் தனித்தனியாகக் கோரிக்கை விடுத்துள்ளன. அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகள் கேட்பதற்குப் பிரம்மாண்டமாக இருந்தாலும், இதனை மத்திய அரசு அப்படியே ஏற்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதானாம். காரணம் ஏகப்பட்ட பொருளாதாரக் காரணிகள் மற்றும் அரசுக்கு ஏற்படும் பல லட்சம் கோடிகள் கூடுதல் பணச்சுமை ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே அரசு இதில் இறுதி முடிவு எடுக்கும் என்கிறார்கள்.. அதனால் அடுத்த ஆண்டு மத்தியில் ஊதியக் குழுவின் அறிக்கை வெளியாகும் போதுதான், மத்திய அரசு ஊழியர்களின் இந்த பிரம்மாண்ட சம்பளக் கனவு நனவாகுமா என்பது தெளிவாகத் தெரியும்...!!8வது ஊதியக்குழு
சம்பளத்தை உயர்த்தும் ஃபார்முலா
கற்பனைக்கு எட்டாத சம்பள உயர்வு
அடிப்படை சம்பளம்
மத்திய அரசு சம்மதிக்குமா?