தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தனி ஆணையம் அறிவிப்பு.. தலைமைச் செயலாளர் தலைமையில் செயல்படும்

  • சென்னை: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டுத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக தலைமைச் செயலாளர் செயல்படுவார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் வழங்கவும் தமிழ்நாடு கைடனஸ் என்ற பெயரில் தமிழக அரசின் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தான்,தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், முதலீடுகள் போன்றவற்றை கவனிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, உள்நாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது , அரசின் கொள்கைகளை விளக்கி, பல்வேறு பகுதிகளில் நிறுவனங்களை கொண்டுவருவதற்கு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், "2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்துவதை தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய முதலீடுகளை ஈர்ப்பதுடன், முதலீட்டுக்கான உறுதிமொழிகளை திட்டங்களாக மாற்றி, அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்துவது அவசியம். எனவே தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம், 2018-ன் 16-ஏ பிரிவின் கீழ் தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டுத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கும் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக தலைமைச் செயலாளர் செயல்படுவார்.

    Advertisement

    முதலீடு ரூ.1614 கோடி.. ஆந்திரா 3 நிறுவனங்கள்! தவெகவுக்கு ரியாலிட்டி செக் வைத்த நயினார் நாகேந்திரன்

    தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் செயலாளர் உறுப்பினர்-செயலாளராக இருப்பார். மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உள்துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நிதித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, இயற்கை வளங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள், எரிசக்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, நீர்வளத்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

    Advertisement

    மேலும், நிலச் சீர்திருத்த ஆணையர், நில நிர்வாக ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்-செயலாளர், ' வழிகாட்டி தமிழ்நாடு' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரும் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தியாவுக்கு வெளியே உள்ள தமிழர்களின் முதலீடுகள் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகளை தமிழகத்தில் ஊக்குவிக்கும் வகையிலும் இந்த ஆணையம் செயல்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    English Summary

    A dedicated commission to be set up to attract investments to Tamil Nadu; it will function under the leadership of the Chief Secretary.