சென்னை: தமிழ்நாட்டின் தலைமை செயலகம் எங்கு தான் அமையப்போகிறது என்பது தெளிவாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் பற்றி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. முதலில் கிண்டி என்றார்கள்.. அடுத்து பட்டினம்பாக்கம் என்று கூறினார்கள். அதுபற்றி அரசாணையும் வெளிவந்தது. அதுதான் தற்போது வரை அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் மீனவர்கள் எதிர்க்கும் காரணத்தால் மீண்டும் வேறு இடங்கள் பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் பல்லவன் இல்லம் என்று கூறினார்கள். இன்று நந்தனத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் 1200 கோடியில் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் அமைக்க த.வெ.க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு, பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்தது. அத்துடன் அதற்கான அரசாணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால், அந்தப் பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கு மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதனால், புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை இறுதி செய்வது என்பதில் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில், தொழில்முறை நகரமைப்பு வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த், முதல்வர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு விரிவான அறிக்கையுடன் கடிதம் ஒன்று அனுப்பி இருக்கிறார். அதில், நந்தனத்தில் அரசினர் பண்ணைக்கு அருகில் உள்ள 80 ஏக்கர் அரசு நிலம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலம் தற்போது காஸ்மோபாலிாட்டன் கிளப் மற்றும் கோல்ஃப் விளையாட்டு மைதானத்தின் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 1936-ம் ஆண்டு கோல்ஃப் மைதானத்துக்காக குத்தகைக்கு விடப்பட்ட இந்த நிலத்தின் குத்தகைக்க காலம் முடிவடைந்துவிட்டது. இது தொடர்பான வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், குத்தகையைப் புதுப்பிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு அரசால் எடுக்கப்படவில்லை. எனவே, கிண்டி குதிரைப் பந்தய மைதான நிலத்தை அரசு மீட்டதைப் போல, நந்தனத்தில் உள்ள நிலத்தையும் மீட்டு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் பயன்படுத்தலாம் என்று நகரமைப்பு வல்லுநர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள் நந்தனம் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் எளிதாக மக்கள் வந்து செல்ல முடியும். அண்ணா சாலையில் இருந்து வளாகத்துக்குள் செல்ல 2 அல்லது 3 நுழைவுவாயில்களை அமைக்க முடியும் என்று அறிக்கையில் நகரமைப்பு வல்லுநர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளாகத்தின் பின்புறத்தில் அடையாற்றின் குறுக்கே பாலம் அமைத்தால், கோட்டூர்புரத்துடன் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர். புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாத நிலையில், நந்தனம் நிலத்தைப் பயன்படுத்துவது குறித்த இந்தப் பரிந்துரையை அரசு ஏற்குமா? அல்லது பட்டினப்பாக்கம் இடத்திலேயே தலைமை செயலகத்தை அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனால் அரசு பல்வேறு இடங்களை பரிசீலித்து அந்த இடங்களில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்தது. கூவம் ஆற்றுக்கு அருகில் அந்த வளாகம் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.