சென்னை: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் நகர்புறங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராமபுறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை என்றும் ரூல்ஸ் போட்டது மத்திய அரசு.கடந்த ஆறு மாதங்களாக நீடித்து வந்த சிக்கல் தற்போது மேம்பட்டுள்ளது. எரிபொருள் விநியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளிக்காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடடுத்த போர் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை வளைகுடா நாடுகளில் இருந்தே பெரும்பாலும் எரிபொருள் இறக்குமதி செய்து வந்தது. எரிபொருள்கள் விநியோகிக்க முடியாதநிலை ஏற்பட்டதால், இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிகப்படியாக சிலிண்டர் முன்பதிவு செய்வதை தடுக்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படட்து. அதன்படி, நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் 20 வருடங்களுக்கு முன்பு கிராமமாக இருந்து இப்போது நகரமாக மாறிய பகுதிகளிலுமே அல்லது நகரத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக மாற்றப்பட்டது. இதனால் இந்தியா முழுக்க இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.
சுமார் ஆறு மாத காலம் மக்கள் அவஸ்தை பட்டு வந்த நிலையில், போர் ஓய்ந்து எரிபொருள் விநியோக நிலைமை படிப்படியாக மேம்பட்டு வந்தது. இதனால், கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்பு இருந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான அமைச்சக உத்தரவு நகலையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கில் மோதல் வெடித்தபோது, அமைச்சகம், தற்காலிக தேவை மேலாண்மை நடவடிக்கையாக, எல்.பி.ஜி. மறு நிரப்பல்களை முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, நகர்ப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் என நிர்ணயித்திருந்தது. தற்போது, விநியோக நிலை மேம்பட்டு இருப்பதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாக குறைந்து இருப்பதாலும் அமைச்சகம் தற்போதுள்ள மறு நிரப்பல் முன்பதிவு இடைவெளியைத் திருத்துகிறது. அதன்படி, கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளியை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என வேறுபாடின்றி ஒரே சீராக 25 நாட்களாக நிர்ணயித்து, அதை உடனடியாக அமல்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது" இவ்வாறு அந்த உத்தரவு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.