ஆதார் கார்டு.. எல்லாத்துக்கும் தரலாமா? பிறப்பு சான்றிதழாக பயன்படுத்த முடியுமா? எங்கெல்லாம் செல்லாது?

  • சென்னை: ஆதார் கார்டு இல்லாமல் இப்போது பல வேலைகளை செய்யவே முடியாது என்ற நிலைதான் இருக்கிறது. அரசு நலத்திட்டங்கள் முதல் வங்கி வேலைகள் வரை பல இடங்களில் ஆதார் கேட்கப்படுகிறது. ஆனால், ஆதார் இருந்தால் எல்லா தேவைகளுக்கும் அதையே சான்றாக கொடுக்கலாமா? என்றால்... அப்படியில்லை.. எங்கெங்கே ஆதார் கார்டு செல்லுபடியாகும்? எங்கெங்கே சான்றாக பயன்படுத்தக்கூடாது.. இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    12 இலக்க ஆதார் நம்பர் முக்கியமாக ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான சான்றாகும்.. பெயர், போட்டோ உள்ளிட்ட அடையாள விவரங்களை சரிபார்க்க ஆதார் பயன்படுத்தப்படுகிறது. அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் உதவிகளை உரிய நபர்களுக்கு வழங்குவதிலும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

    Advertisement

    ஆதார் கார்டு பயன்கள்

    வங்கி மற்றும் நிதி தொடர்பான வேலைகளிலும் ஆதார் கார்டுக்கு நிறையவே முக்கியத்துவம் இருக்கிறது. ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் e-KYC மூலம் நிறைய சேவைகளைப் பெற முடியும்... அரசு நலத்திட்டங்களில் பயனாளியை அடையாளம் காணவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோல, ஆதார் அட்டையை அடையாள சான்றாக பல இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடக்கூடாது. ஆதார் என்பது எல்லா தேவைகளுக்கும் ஏற்ற ஒரே சான்று கிடையாது.

    குடியுரிமைக்கான சான்று

    குறிப்பாக குடியுரிமைக்கான சான்றாக ஆதாரை பயன்படுத்த முடியாது. UIDAI-யே இதை தெளிவாக சொல்கிறது.. ஆதார் வைத்திருப்பதால் அந்த நபருக்கு இந்திய குடியுரிமை இருப்பது உறுதியாகிவிடாது. அதேபோல, ஆதார் ஒரு நபரின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணமும் கிடையாது.

    Advertisement

    இதில் பிறந்த தேதியும் முக்கியமான விஷயம்... பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும்போது, பயனாளர் தெரிவிக்கும் வாய்மொழித் தகவல் அல்லது சுய உறுதிமொழியின் அடிப்படையில் பிறந்த தேதி பதிவு செய்யப்படுகிறது.

    சரியான பிறந்த தேதி அல்லது மாதம் தெரியாத நிலையில், அவர் சொல்லும் உத்தேச வயது அல்லது தோற்றத்தின் அடிப்படையில் பிறந்த ஆண்டு கணக்கிடப்படும். அப்படிப்பட்ட சூழலில், ஆதார் அமைப்பு அந்த ஆண்டின் ஜனவரி 1ம் தேதியை பிறந்த தேதியாக எடுத்துக்கொள்ளும். அதனால், ஆதாரில் ஒரு பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதற்காக அது கட்டாயம் அதிகாரப்பூர்வ பிறந்த தேதி சான்றாகிவிடாது.

    Advertisement

    முகவரி மாற்றம் ஏன்

    இன்னொரு விஷயம்... ஆதார் அட்டையில் இருக்கும் முகவரி பழையதாக இருந்தால், இப்போதுள்ள அட்ரஸை நிரூபிக்க வேண்டிய இடத்தில் அதை அப்படியே பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.. எனவே உங்கள் வீட்டு முகவரி மாறியிருந்தால், அதை உரிய ஆவணங்களுடன் புதுப்பித்துக் கொள்வது நல்லது.

    எனவே ஆதார் கார்டுதான் நம்ம கிட்ட இருக்கே, எல்லா இடத்திலும் இதையே கொடுத்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது. அடையாளத்தை நிரூபிக்க ஆதார் பயன்படும்.. ஆனால் குடியுரிமை, பிறந்த தேதி போன்ற குறிப்பிட்ட விஷயங்களை நிரூபிக்க தேவையான இடங்களில் அதற்கான உரிய ஆவணங்களையே பயன்படுத்த வேண்டும்.

    Advertisement

    சுருக்கமாக சொன்னால், ஆதார் முக்கியமான அடையாளச் சான்றுதான்... ஆனால் எல்லாவற்றுக்கும் பயன்படும் ஒரே சான்று கிடையாது.. இதைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே, தேவையில்லாத குழப்பங்களையும் ஆவணச் சிக்கல்களையும் தவிர்க்கலாம்....!!

    English Summary

    This guide clarifies common misconceptions surrounding the Aadhaar card. While it serves as a biometric identity proof, it is not a direct substitute for proof of citizenship or date of birth certificates. Learn when and where your Aadhaar card is valid to avoid unexpected document rejection and complications with your essential paperwork.