குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்!

  • சென்னை: அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 3 பேர், தவெகவில் இணைந்திருந்தனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஆதவ் அர்ஜுனா இதனை மறுத்திருக்கிறார்.

    Advertisement

    இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது, "நாங்கள் மாற்றத்திற்கான கட்சி என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அப்படி இருக்கையில், கட்சிக்குள் வரக்கூடியவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் இருக்கும். அவர்களைதான் நாங்கள் கட்சிக்குள் எடுத்துக்கொள்கிறோம்.

    Advertisement

    ஊழல் ஒழிப்பு எங்களின் முக்கிய இலக்கு. அப்படி இருக்கையில் புதியதாக கட்சியில் சேர்பவர்கள் மீது இந்த குற்றச்சாட்டு இல்லாமல் இருக்க வேண்டும். அதை தலைவர் விஜய் உறுதி செய்துதான் வெளி ஆட்களை உள்ளே சேர்க்க அனுமதி கொடுப்பார். உதாரணமாக செங்கோட்டையனை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கடந்த டிசம்பர் மாதமே அதிமுகவின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டார். கட்சியின் திட்டங்களை, கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார்.

    அதிமுகவினர் தவெகவுக்கு இணைந்ததற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் வைக்கப்பட்டிருந்த போது, திமுகவுடன் இணைந்து பயணிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அது கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் அவர்கள் கட்சி மாறியிருக்கின்றனர்.

    Advertisement

    தவெகவின் கொள்கைக்கும், அதிமுகவின் கொள்கை, எம்ஜிஆரின் கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவேதான் நாங்கள் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் இது குறித்து பேட்டி கொடுத்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

    மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இதேபோல ராஜினாமா செய்துவிட்டு வருவார்களா? என்று கேள்வி எழுப்பியதற்கு, அது அவர்களின் சொந்த முடிவு. யார் எப்போது வருவார்கள் என தெரியாது. ஆனால் வந்தால் வரவேற்போம் என்றும் கூறியிருக்கிறார்.

    அதேநேரம், ஒரு கட்சியிலிருந்து மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் இன்னொரு கட்சியில் சேர்வது குதிரை பேரம் ஆகாது. ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தது குதிரை பேரமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

    English Summary

    Aadhav Arjuna: Three individuals who resigned their MLA posts from the AIADMK have joined the TVK. This move has created a stir in Tamil Nadu politics. The DMK has accused the TVK of engaging in horse-trading; however, Adhav Arjuna has denied this allegation.