சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் ஏன்? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

  • சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே மாநில நெடுஞ்சாலையில் பெயர் பலகையில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருந்தது ஏன் என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கைதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உயிர்க் கொள்கை; நிரந்தரக் கொள்கை! அதில், இன்றும் என்றும் என்றென்றைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கவே எடுக்காது.

    Advertisement

    இந்நிலையில், 'மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி'த் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டதில் சில குளறுபடிகள் நடந்தது அரசின் கவனத்திற்கு வந்தது.

    அதிகாரிகள் கவனக்குறைவு

    அது தொடர்பாக நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையில், "குறிப்பிட்ட அதிகாரிகள் சிலரின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும்
    தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது" என்பது கண்டறியப்பட்டது.

    உடனடியாக, இந்தத் தவறுக்குக் காரணமான உதவிப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் என இரண்டு அதிகாரிகள் நேற்றே (01.10.2026) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    Advertisement

    3 மொழிகள்

    அதோடு மூன்று மொழிகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அந்த பெயர்ப் பலகையும் உடனடியாக மாற்றப்பட்டு, இருமொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப் பலகை அதே இடத்தில் பொருத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    அரசின் கவனத்திற்கு வந்த சில மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    தமிழக அரசின் கொள்கை

    தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக - கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படும் துறைசார் அதிகாரிகள் சட்டப்படியான - துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாவார்கள் என்பதையும் இங்கு உறுதியாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.

    Advertisement

    மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் முறியடிப்போம்! இருமொழிக் கொள்கையை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்! இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    மாநில நெடுஞ்சாலைத் துறை

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இங்கு சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

    வழித்தடங்கள்

    இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகர், நெல்லைக்கு செல்லும் வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த பலகையில் முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும் அடுத்து இந்தியிலும் 3ஆவதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.

    Advertisement

    பெயர் பலகை

    மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒரு சில பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் கடைசியாகவே உள்ளன. ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழுக்கு அடுத்தபடியாக இந்தியில் எழுத்துக்கள் இருந்ததை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

    மதுரையிலும் இதேதான்

    சாத்தான்குளத்தை தொடர்ந்து மதுரையிலும் பெயர் பலகை இந்தியில் பொறிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் கவனக்குறைவால் நடந்ததா ஆதவ் என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

    English Summary

    Minister Aadhav Arjuna explains about signboard in Sathankulam highway, why the place names are in hindi?