இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்னார்” - போட்டு உடைத்த பாடகர் அறிவு

  • சென்னை: "நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். இந்தப் போராட்டத்தில் ஏன் இறங்கினீர்கள்? இது தேவையில்லாத விஷயம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார் என பாடகர் தெருக்குரல் அறிவு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாடாளுமன்றத்தை நோக்கி நேற்று பேரணியாகச் சென்றபோது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    Advertisement

    இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாடகர் தெருக்குரல் அறிவு, "முன்பு ஜாதியால் கல்வி மறுக்கப்பட்டது. இப்போது நுழைவுத்தேர்வுகளால் கல்வி மறுக்கப்படுகிறது. ஆசிரியர்களே வேலைக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்கும். கல்வியில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை.

    Advertisement

    நீட் தேர்வு மட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும். ஆணி பொருத்திய லத்தியைக் கொண்டு மாணவர்களை அடிக்கிறார்கள். போராடும் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்கிக் கொண்டிருக்கிறது. அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அனிதாவின் அண்ணனாகவே நான் தலைமைச் செயலகம் முன்பு போராடினேன்." என்றார்.

    மேலும் பேசிய தெருக்குரல் அறிவு, "நான் தலைமைச் செயலகம் முன்பு சென்று போராடியபோது என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் முதலமைச்சரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன். "நீட் தேர்வை ரத்து செய்வது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் தான் முடியும். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இந்த போராட்டத்தில் இறங்கினீர்கள்" என எனக்கு அட்வைஸ் செய்து அனுப்பினார்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அண்மையில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தெருக்குரல் அறிவுடன் நீண்ட நேரம் பேசி அவரை வழியனுப்பி வைத்தார். அப்போது வெளியே வந்த தெருக்குரல் அறிவிடம், முதலமைச்சரை சந்தித்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Singer Therukural Arivu stated that Minister Aadhav Arjuna told him, “The NEET exam can be cancelled only if there is a majority in Parliament. Why did you get involved in this protest? This is an unnecessary issue.”