“தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் யாரும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம்” - ஆதவ் அர்ஜூனா பேச்சு!

  • சென்னை: "திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொழிற்சாலை லைசென்ஸ் வழங்கியதில் இதுவரை வெளிப்படைத்தன்மை இருந்ததே இல்லை. அரசியல் இல்லாமல், அதிகாரம் இல்லாமல், டாஸ்மாக் தொழிற்சாலை உரிமம் வாங்க முடியுமா? தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் எப்போதும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் பேசியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுகையில், "603 டாஸ்மாக் கடைகளை திமுக மூடியது. மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என செயல்படவில்லை. மதுபானங்களின் விலை உயர்த்தியதால் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரித்தது." என்றார்.

    Advertisement

    மேலும், "ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்கு போட்டுள்ளீர்கள். அது உண்மைக்கு மாறான வழக்கு. அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளலாம். கடந்த திமுக ஆட்சியில் தவறு நடந்ததா? இல்லையா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தெரியும்." எனத் தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

    சினிமா மற்றும் டாஸ்மாக் துறைகளில் கடந்த ஆட்சியில் ஊழல் என பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டிய நிலையில், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    அதன்பின் சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரமானது சாராய நிறுவனங்களைத் தொடங்க லைசென்ஸாக மாற்றப்பட்டுள்ளது. அதைத்தான் ஊழல் என்கிறோம். மதுவை ஒரே நாளில் கையெழுத்து போட்டு க்ளோஸ் பண்ண முடியும். ஆனால், குடிநோயாளிகளை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

    திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொழிற்சாலை லைசென்ஸ் வழங்கியதில் இதுவரை வெளிப்படைத்தன்மை இருந்ததே இல்லை. அரசியல் இல்லாமல், அதிகாரம் இல்லாமல், டாஸ்மாக் தொழிற்சாலை உரிமம் வாங்க முடியுமா? ஒரு சாமானியன் டாஸ்மாக் தொழிற்சாலையின் உரிமம் வாங்க முடியுமா? தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் எப்போதும் சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம். லைசென்ஸ் வாங்க மாட்டோம் என உறுதியாகச் சொல்கிறோம்.

    Advertisement

    இனிமேல், மது விலக்குத்துறை வெளிப்படைத் தன்மையோடு செயல்படும். போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழக வெற்றிக் கழக ஆட்சியை உருவாக்கியது பெண்களும், இளைஞர்களும் தான்." என்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

    மேலும் பேசிய ஆதவ் அர்ஜுனா, "மதுரை மாநகராட்சி ஒட்டுமொத்தமாகவே ஊழலில் ஊறிப்போயிருந்தது. மதுரையில் மட்டுமல்ல, அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. எந்தெந்த மாநகராட்சிகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை விரைவில் நாங்கள் வெளிப்படுத்துவோம்.

    சமூகநீதிக்காக கலைஞர் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டார். இந்தியாவிலேயே அதிகமான 69% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் உருவாக்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு கொள்கையை ஜெயலலிதா தனது சட்டப் போராட்டத்தின் மூலம் பாதுகாத்தார்.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக வெற்றி பெறும். நேபாள நிலச்சரிவு பேரிடரில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 304 பேரில் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 84 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்தார்.

    English Summary

    Minister Aadhav Arjuna stated in the Assembly, “Neither TVK MLAs nor ministers will ever engage in the liquor business.”