ஆவின் பால் விலை ரூ.5 உயர்கிறதா? வெளியான தகவல் குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம்!

  • சென்னை: ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக வெளியான செய்தி தவறானது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் வாயிலாக தினமும், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும், 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்ச் நிற 500 மி.லி, பால் பாக்கெட் 30 ரூபாய்க்கும், பச்சை மற்றும் ஊதா நிற பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், நீல நிற பால் பாக்கெட், 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை, 75 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகின்றன. தனியாரை விட குறைந்த விலையில், ஆவின் பால் விற்கப்படுகிறது. இந்தச் சூழலில் பால் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்த, அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    Advertisement

    தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாக இருப்பதால், அது ஏழை நடுத்தர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப் பட்டால், ஆவின் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றாலும், பொதுமக்கள் அல்லலுக்கு உள்ளாக நேரிடும். மாதாந்திர பட்ஜெட்டில் கணிசமான தொகை உயரும். எனவே, ஆவின் பால் விலையை உயர்த்தக் கூடாது என கோரிக்கைகள் எழுந்தன.

    ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக, ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் "ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    மேலும் பால் விலை உயர்வு தொடர்பாக நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறான செய்தி. எனவே பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஆவின் - தரத்திலும், சேவையிலும் என்றும் மக்களின் நம்பிக்கையுடன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Aavin administration has clarified that reports suggesting a recommendation was made to the government to increase the price of Aavin milk by Rs. 5 per litre are incorrect.